தலிபான்களிடம் இருந்து மூன்று நகர்களை தக்கவைப்பதில் ஆப்கான் அரசு போராட்டம்

கந்தஹார், ஹெரத், லஷ்கர் காஹ்வில் உக்கிர மோதல்

தலிபான்கன் மூன்று பிரதான நகரங்கள் மற்றும் விமான நிலையம் ஒன்றின் மீதான தேசிய அளவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், அதனை கையாள்வதில் ஆப்கான் அரசு தடுமாற்றம் கண்டுள்ளது.

ஹெரத் நகருக்கு நூற்றுக்கணக்கான கொமாண்டோக்கள் நிறுத்தப்பட்டிருப்பதோடு தெற்கு நகரான லஷ்கர் காஹ்வில் மேலதிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேறும் செயற்பாட்டை ஆரம்பித்த கடந்த மே மாதம் தொடக்கம் தலிபான்கள் தனது தாக்குதல்களை அதிகரித்து வேகமாக முன்னேற்றம் காண ஆரம்பித்தனர்.

நாட்டின் முக்கிய எல்லைக் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் தற்போது மாகாணத் தலைநகரங்களை இலக்கு வைத்து தமது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.

ஆப்கானின் இரண்டாவது மிகப்பெரிய நகரும் முன்னர் தலிபான்களின் கோட்டையாகவும் இருந்த கந்தஹார் விமான நிலைத்தின் மீது கடந்த ஞாற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

ஒடு பாதை மீது இரு ரொக்கெட் குண்டுகள் விழுந்ததகவும் அதனை சீர் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் விமான நிலையத் தலைவர் மசூத் பஷ்தூன் தெரிவித்தார். தலிபான்களிடம் இருந்து நகரை தக்கவைத்துக்கொள்ளும் முக்கிய விநியோகங்கள் மற்றும் வான் உதவிகளை பெறுவதில் இந்த விமான நிலையம் தீர்க்கமானதாக உள்ளது. மேலும் இரு மாகாணங்களை கைப்பற்றுவதை தலிபான்கள் நெருங்கி வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் அருகாமையில் உள்ள ஹெல்மான்ட் மாகாணத்தின லஷ்கர் காஹ்வும் அடங்கும்.

‘நகருக்குள் மோதல் இடம்பெற்று வருவதோடு சிறப்புப் படையினரின் உதவியை நாம் கேட்டுள்ளோம்’ என்று ஹெல்மான்ட் மாகாண சபை தலைவர் அதாவுல்லா அப்கான் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

தலிபான்களை நகரங்களில் இருந்து பின்வாங்கச் செய்ய ஆப்கான் பாதுகாப்பு படையினர் வான் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர். இந்த தாக்குதல்களால் பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகள் பாதிப்படையும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

‘இந்த நகர் மோசமான நிலையில் உள்ளது. என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை’ என்று லஷ்னர் கார் நகர குடியிருப்பாளரான ஹில்மி கரிமி தெரிவித்துள்ளார். இந்த நகரில் 200,000 மக்கள் வாழ்கின்றனர்.

‘தலிபான்கள் எம்மீது கருணை காட்டவோ, அல்லது அரசு குண்டு வீசுவதை நிறுத்தவோ மாட்டாது’ என்றும் அவர் கூறினார்.

மேலும், மேற்காக ஹெரத்தின் புறநகர் பகுதியில் கடந்த ஞாயிறு இரவு உக்கிர மோதல்கள் இடம்பெற்றன. தலிபான் நிலைகள் மீது சரமாரி வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.

தாக்குதல்களில் 100 தலிபான்கள் கொல்லப்பட்டதாக ஹெரத் மாகாண ஆளுநரின் பேச்சாளர் ஜெய்லானி பர்ஹாத் தெரிவித்துள்ளார். தலிபான்கள் மற்றும் அரச படையினர் உயிர்ச்சேதங்கள் பற்றி மிகைப்படுத்தி கூறி வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை உறுதி செய்ய முடியாதிருப்பதான சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தலிபான்கள் பிரதான நகரங்களை கைப்பற்றுவது அவர்களின் தற்போதைய தாக்குதல்களை மற்றொரு மட்டத்திற்கு உயர்த்துவதாக இருப்பதோடு ஆப்கான் அரச படைகள் இந்த தாக்குதல்களை முறியடிப்பதில் தோல்வி கண்டிருப்பதை காட்டுவதாகவும் கருதப்படுகிறது.

எனினும் இதற்கு முன்னரும் தலிபான்கள் ஆப்கான் நகரங்களை கைப்பற்றியபோதும் சிறிதி காலமே அதனை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

தாலிபன்கள் தொடர்ந்து தங்கள் தாக்குதல் மூலம் முன்னேறி வருவதால், வரும் மாதங்களில் பெரிய நெருக்கடி ஏற்படலாம் என மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.

நவம்பர் 2001 இல் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானில் இருந்த தாலிபன்களின் ஆட்சியை ஓடுக்கியது. மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளுக்கு பயிற்சி அளித்து அவர்களைத் தயார்படுத்திய போதும் தாலிபன்கள் மீண்டும் ஒன்றிணைந்து வலிமை பெற்றனர்.

கடந்த பெப்ரவரி 2020இல் ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச படைகளைப் பின்வாங்க, தாலிபன்களுடன் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக் கொண்டார். 2021ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதத்துக்குள் பின்வாங்கப்படும் என அறிவித்தார்.

Tue, 08/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை