இந்துசமய கலாசார திணைக்களத்திற்கு சொந்தமான நாவலர் மணிமண்டபத்தை மீளவும் ஒப்படையுங்கள்

சமயத் தலைவர்கள், கல்விமான்கள் கோரிக்கை

நாவலர் கலாசார மண்டபம் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்குச் சொந்தமானது. அதனை அவர்களிடமே ஒப்படைத்துவிடுங்கள் என்று சமயத்தலைவர்களும் கல்விமான்களும் யாழ்.மாநகரசபையிடம் கூட்டாகக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். நல்லை ஆதீன முதல்வர், சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர், கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன், யாழ்.பல்கலைக்கழகப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், கலாநிதி ஆறு.திருமுருகன், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் சி.தனபாலா ஆகியோர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர், ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள்,

இந்த மண்டபம் அமைக்கப்பட்டதன் நோக்கம் இன்றுவரை நிறைவேறவில்லை. இது நம்மவரே நாவலரின் ஆத்மாவை வேதனைப்படுத்தவைக்கும் விடயம். உரியவர்கள் அதனை ஒரு நல்ல நோக்கத்திற்காகவே மீண்டும் கோருகிறார்கள். உரியவர்களிடமே அதனைக் கொடுப்பது சாலச்சிறந்தது. .

சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர், கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா,..

இந்துக்கள் சார்பாக முன்வைத்த கோரிக்கையில், நாவலர் பிறந்த மண்ணில் - நாவலருக்குரிய பணிகளை - அவருடைய நினைவு மண்டபத்திலே முன்னெடுப்பதற்கு நம்மவரே தடையாகவிருப்பதென்பது, “நம்மவரே என்னைக் கண்ணீர் சிந்தவைத்தனர்” என்று நாவலரே தன் வாயாற்சொல்லி வேதனைப்பட்டதை நினைவுகூர்வதாய் உள்ளது. மண்டபத்தைத் திணைக்களத்திடம் வழங்குங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் ,

நாவலரின் எண்ணங்கள் நம்மவர் ஒற்றுமையில் நிலைக்கவேண்டும் என்றார். நம்மவரே அதற்குத் தடையாக இருப்பது நன்றன்று. நாவலர் வழிகாட்டிய பணியைத் தீவிரப்படுத்த இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் முனைப்புக்காட்டுகிறது. அவர்களின் செயலூக்கத்திற்கு உந்துசக்தியாக இருங்கள். திணைக்களத்திடம் உரியமுறையிற் கலாசார மண்டபத்தை ஒப்படைத்து நீங்களும் ஒரு பங்காளியாயிருந்து செயற்படுங்கள்.

யாழ்.பல்கலைக்கழகப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்,

வரலாறு ஆரம்பித்த காலம் முதல் நம் இனமே எமது முன்னேற்றத்திற்கான தடைக்கல் என்பதில் மட்டும் இன்றுவரை ஒற்றுமை நிலவுகிறது. நிபந்தனைகளோடு வழங்கப்பட்ட நாவலர் கலாசார மண்டபத்தை மீளவும் அதற்குரிய அரச நிர்வாகம் நியாயபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கப் பல தடவைகள் கோரியிருந்தது. இதனால் எந்தப் பலனும் இல்லை. வழங்குவதற்கு எது தடை என்பது புரியவில்லை என்று தனது ஆதங்கத்தினைத் தெரிவித்தார்.

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்.

இந்துமாமன்றத்தின் சார்பில், நாவலரின் புனிதமான நினைவு மண்டபம் ஆன்மிகச் சூழலில் நல்லமுறையில் இதுவரை பேணப்படவில்லை. நாவலரின் மண்டபத்தில் அவரது ஒரு புகைப்படங்கூட இல்லை. நாவலரின் மண்டபம் என்ன நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டதோ அவையெதுவும் நிகழ்ந்தேறவில்லை ஆதலால் மண்டபத்தைத் திணைக்களத்திடம் ஒப்படையுங்கள்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு சின்னத்துரை தனபாலா கிழக்கிலங்கையில் இன்று புனிதமாகப் போற்றப்படும் விபுலானந்தர் நினைவிடம் - இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின், பெருஞ்செலவிலான புனரமைப்பில், ஆன்மிகச் செழுமையோடும் வரலாற்றுப் பெருமையோடும் நிமிர்ந்து நிற்கிறது. திணைக்களத்திற்கு உரிமமில்லாத இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி அந்தத் திணைக்களத்தாற் புனரமைக்கப்பட்டமைக்கு - எமக்கு வழிகாட்டிய ஆன்மிகவாதிகளின் நினைவிடங்கள் என்றும் பூஜிக்கப்படவேண்டியவையே என்பதுமட்டுந்தான் காரணம். அவர்களின் உயர்ந்தவெண்ணம் இன்று நம்மனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.ஆனால் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்குச் சொந்தமான நாவலர் கலாசார மண்டபம் வெறும் பெயரோடு மட்டும் கட்டடமாக நிற்கிறது. இதற்கான தடைக்கல் யார்? இது வரலாற்றுத் தவறு என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

Fri, 08/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை