ஆப்கான் தலைநகர் காபுலை நெருங்கியுள்ள தலிபான்கள்

அருகாமை கான்சி நகரும் வீழ்ந்தது

ஆப்கான் தலைநகர் காபுலில் இருந்து வெறும் 150 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கான்சி நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஒரு வாரத்திற்குள் தலிபான்களிடம் வீழும் பத்தாவது மாகாணத் தலைநகராக இது உள்ளது. இந்த நகர் காபுல் மற்றும் கந்தஹாருக்கு இடையிலான நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதோடு தலைநகருக்கும் கிளர்ச்சியாளர்கள் பலம் கொண்ட தெற்கிற்குமான நுழைவாயிலாக உள்ளது.

‘ஆளுநர் அலுவலகம், பொலிஸ் தலைமையகம் மற்றும் சிறைச்சாலை என நகரின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்’ என்று மாகாண சபைத் தலைவர் நாசிர் அஹமது பாக்கிரி ஏ.ப்.பி செய்தி நிறுவத்திற்கு தெரிவித்துள்ளார்.

நகரின் சில பகுதிகளில் தொடர்ந்து மோதல் இடம்பெற்றபோதும் மாகாணத் தலைநகரின் பெரும்பகுதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். தலிபான் பேச்சாளரின் சமூகதளத்தில் இந்த நகரை கைப்பற்றியதை தலிபான்கள் உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைகள் 20 ஆண்டு போரை முடித்து ஆப்கானில் இருந்து முழுமையாக வாபஸ் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்த கடந்த மே மாதம் தொடக்கம் தலிபான்கள் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வேகமாக முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இந்நிலையில் கான்சி நகர் வீழ்ந்திருப்பது ஆப்கான் அரசு மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. தலிபான்களின் முன்னேற்றத்திற்கு மத்தியில் பாதுகாப்பு படையினருக்கு மேலதிக துருப்புகளை அனுப்ப முடியாமல் வீதித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ஆப்கானில் 34 மாகாணத் தலைநகரங்களில் 10 தலைநகரங்களில் தலிபான்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதில் வடக்கின் மிகப்பெரிய நகரான மசாரே சரீபை தலிபான்கள் முற்றுகையிட்டுள்ளனர். தெற்கின் முக்கிய பகுதிகளான கந்தஹார் மற்றும் லஷ்கர் காஹ் அதேபோன்று மேற்கே ஹெரத் நகரில் உக்கிர மோதல் நீடித்து வருகிறது.

கந்தஹாரின் பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையை கைப்பற்றியதாக தலிபான்கள் கடந்த புதன்கிழமை அறிவித்தனர். நீண்ட முற்றுகைக்கு பின் சிறைச்சாலை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் தலிபான்கள் குறிப்பட்டுள்ளனர்.

1990களில் கந்தஹார் நகர் தலிபான்களின் கோட்டையாக இருந்து வந்தது. அந்த நகரை இழப்பது அரச படைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதேவேளை தலிபான்கள் தொடர்ந்து முன்னேறி வரும் சூழலில் அந்நாட்டு இராணுவ தளபதியை ஆப்கானிஸ்தான் மாற்றியுள்ளது.

அரசு ஆதரவு படைகளை ஒன்று திரட்டுவதற்காக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நகரான மசாரே ஷரீபுக்கு சென்றுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் இராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அகமதுசாய் மாற்றப்பட்டுள்ள செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஜூன் மாதம்தான் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். புதிய தளபதி யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஆப்கானில் மனிதாபிமான நெருக்கடியும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஆரம்பம் தொட்டு சுமார் 390,000 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருப்பதாகவும் அது மே மாதம் தொடக்கம் உச்சத்தை எட்டி இருப்பதாகவும் ஐ.நா பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐ.நாவின் மனிதநேய விவகாரக் குழு வெளியிட்ட செய்தியில், ‘தாக்குதலால் 3,90,000 மக்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த ஜூலை 1 முதல் ஓகஸ்ட் 5 வரை காபுல் நகரத்திற்கு மட்டும் 5,800 க்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். மேலும், பலர் வீதியோரங்களில் தற்காலிக இருப்பிடம் அமைத்தும், பூங்காக்களிலும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

நாடு முழுவதும் இதுவரை 156 தொண்டு நிறுவனங்கள் மூலம் 78 இலட்சம் மக்களுக்கு உணவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.’

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் பேரிடர் முகாமைத்துவ துறை அமைச்சர் குலாம் பகுதிதீன் கூறும்போது, ‘கடந்த 2 மாதங்களாக ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் காரணமாக 34 மாகாணங்களிலிருந்து சுமார் 60,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. தலிபான்களின் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Fri, 08/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை