ரிஷாத் எம்.பியின் மைத்துனரை நீதிமன்றில் ஆஜராக்க உத்தரவு

எதிர்வரும் 16 ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்படுவார்

முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்த மற்றுமொரு சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரர் மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் ரஜிந்ர ஜயசூரிய, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரிஷாத் பதியுதீனின் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி மரணித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத் 04ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் விளக்கமளித்திருந்தனர்.

2016ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய யுவதியொருவர், சந்தேக நபரினால் இரு வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அங்குள்ள விருந்தகத்தில் வைத்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து இரண்டாவது முறையாகவும் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரிடம் கூறிய போதிலும், அது தொடர்பில் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட யுவதி வழங்கிய முறைப்பாட்டிலுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த யுவதியிடம் மீண்டும் வாக்குமூலம் பெறுவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கருவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் விளக்கமளித்திருந்தனர்.

Fri, 08/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை