24 மணிநேரமும் மூடிய அறைக்குள் தனிமையில் அடைத்து வைத்துள்ளனர்

பாராளுமன்றில் ஜனாதிபதியிடம் ரிஷாத் MP நீதிகேட்டார்

 

தன்னை 24 மணிநேரமும் மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, மலசலகூடத்துக்கு மாத்திரமே தன்னை வெளியில் செல்ல அனுமதிப்பதாகவும் சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்து வைத்தாலும்  5 நாட்கள் மாத்திரமே விசாரணை நடத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய ​போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த சமயம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சபையில் பிரசன்னமாகியிருந்தனர். ஜனாதிபதியின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டுவந்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்துவைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள். இன்றுவரை, எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும். ஜனாதிபதி அவர்களே, இன்னுமொரு விடயம். என்னைக் கைது செய்தவேளை, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் “என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?” என்று நான் கேட்டபோது, எனது அமைச்சில் பணிபுரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள். இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை ஜனாதிபதி அவர்களே என்றார். அவர் தொடர்ந்து உரையாற்ற முயன்ற ​போதும் சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

Thu, 08/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை