தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்

ஆசிரியர்-, அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டு அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றுகிறது. இதன் காரணமாகவே வீதிக்கிறங்கி போராடுகிறோம். கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

நிகழ்நிலை முறைமை ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகளிலும், சாதாரணதர செயன்முறை பரீட்சையிலும் கலந்து கொள்ள போவதில்லை. ஆகவே அரசாங்கம் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிடின் தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்பு மற்றும் கல்வி சேவையை முக்கிய சேவையாக்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினர் நேற்று கொழும்பு நகருக்குள் உட்பிரவேசிக்கும் பிரதான நான்கு வழிகள் ஊடாக வாகன பேரணியாக கொழும்பு நகரிற்குள் பிரவேசித்தார்கள்.

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினர் நேற்று நீர்கொழும்பு வீதியில் நவலோக மைதானம் அருகிலிருந்தும், கண்டி வீதியில் கடவத்த நெடுஞ்சாலை உள்நுழை வீதி,ஹைலெவல் வீதியில் பன்னிபிடிய தர்மபால வித்தியாலய வீதி, மற்றும் காலி வீதியில் மொறட்டுவை வீதி ஆகிய வீதிகள் ஊடாக காலை 10. 30 மணியளவில் வாகன பேரணியை ஆரம்பித்து பகல் 2 மணிக்கு கொழும்பு ஜனாதிபதி செயலக வீதியை வந்தடைந்தார்கள். பெருமளவிலானோர் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டார்கள். ஆர்பாட்டகாரர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் உட்பிரவேசிக்க முற்பட்ட வேளை பாதுகாப்பு தரப்பினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. காலி முகத்திடல் வீதியின் பாதுகாப்பு வழமைக்கு மாறாக பலப்படுத்தப்பட்டிருந்தது. தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதி கோரினர். அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதன்போது ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்தார். ஆசிரியர்- அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் அமைச்சரவை ஊடாக தீர்வு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே போராட்டத்தில் ஈடுப்படுவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டது.

Thu, 08/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை