பேக்கரிகளில் பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

நாட்டில் பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாத நிலையில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச பேக்கரிகளில் பாண் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோவிட் 19 வைரஸ் பரவல் நெருக்கடி நிலையை சாதகமாகப் பயன்படுத்தி, பேக்கரிகளில் அடிக்கடி விலையேற்றம் இடம்பெறுவதாகவும் மக்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஒரு வருட காலத்தில் பணிஸ் மற்றும் அதற்கு சமாந்தரமான உணவு வகைகளின் விலைகள் ரூபா 5 முதல் 7 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்படுகின்றனர்.

அதிகமான பேக்கரிகள் முன்னறிவித்தல், முறையான அனுமதிகளின்றி தாம் நினைத்த மாத்திரத்தில் விலைகளை உயர்த்திவருவது தொடர்பில் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவைதவிர,  சில பேக்கரி உற்பத்திகளின் தரத்திலும், உருவத்திலும் குறைவேற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதிகமான பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்கள் சுவையின்றி தரக்குறைவாகக் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த பேக்கரிகளுக்கு வருடாந்த வியாபார உத்தரவுப் பத்திரம் வழங்குபவர்கள்  கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

 
Sat, 08/28/2021 - 08:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை