எத்தியோப்பியாவில் இனரீதியான வன்முறைகளினால் 210 பேர் பலி

எத்தியோப்பியாவின் பதற்றம் மிக்க ஒரோமியா பிராந்தியத்தில் கடந்த ஒருசில நாட்களில் இடம்பெற்ற இன வன்முறைகளில் 210க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக எத்தியோப்பிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்குப் பிராந்தியத்தின் கிடா கிரிமுவில் இருந்து பாதுகாப்பு படையினர் வெளியேறிய பின்னர் அந்தப் பகுதிக்கு ஒரோமோ கிளர்ச்சிக் குழுவினர் வந்திருப்பதாக சாட்சியங்களை மேற்கோள்காட்டி மேற்படி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

‘அந்தத் துப்பாக்கிதாரிகளால் 150 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர்கள் மற்றும் ஏனையவர்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்தனர்’ என்று அந்த மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டது.

இந்த தாக்குதல்கள் காரணமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் அண்டைய பகுதிகளுக்கு வெளியேறி இருப்பதோடு இதனால் பழிதீர்க்கும் கொலைகள் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

‘அடுத்தடுத்த நாட்களில் சில குடியிருப்பாளர்கள் இனரீதியாக நடத்திய பழிவாங்கும் தாக்குதல்களில் 60 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று ஆணைக்குழு குறிப்பிட்டது.

இந்த தாக்குதல்களை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கும்படி அரசினால் நடத்தப்படும் அந்த மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Sat, 08/28/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை