தலிபான்களுக்கு வழங்கும் ஆதரவை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்

 ஆப்கான் அரசு பாகிஸ்தானிடம் கோரிக்கை

 

கடந்த பத்து ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளைத் தகர்ப்பதையே தலிபான்கள் தமது இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். எனவே இஸ்லாமாபாத் தலிபான்களுக்கு வழங்கிவரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று ஆப்கானிய அரசு பாகிஸ்தானைக் கேட்டிருக்கிறது.

இந்தியாவுக்கான ஆப்கான் தூதுவர் பரீட் மமூன்யே ஏ என். ஐ. செய்திச் சேவைக்கு வழங்கிய ஒரு நேர்காணலின் போது குவேட்டா, பேஷாவர் மற்றும் வேறு இடங்களில் அமைந்திருக்கும் தலிபான் முகாம்கள் ஆப்கானுக்கு பிரச்சினையாக இருப்பதாகவும் தலிபான் தலைவர்களின் குடும்பங்கள் அங்கே வசிப்பதாகவும் குறிப்பிட்டதோடு, பாகிஸ்தானில் காணப்படும் ஆதரவு கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டுமென்றும் பாகிஸ்தானின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் காண விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஏப்ரல் 21ம் திகதியின் பின்னர் ஆப்கானில் நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன. ஏற்கனவே இரண்டு இலட்சம் பேர் அதிகளாகியுள்ளனர். அரச படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே உக்கிர மோதல்கள் நடைபெற்று வருகின்றன. 375 மாவட்டங்களில் 200 மாவட்டங்களில் மோதல் நடந்து வருகிறது. 18 எல்லை மாவட்டங்களில் மோதல் நடைபெற்று வருகிறது. எனினும் கடந்த மூன்று நாட்களில் பத்து மாவட்டங்களை ஆப்கான் படைகள் மீளக் கைப்பற்றியுள்ளன. வெளிநாட்டுப் படைகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை ஆயிரம் ஆப்கான் படையினர் உயிரிழந்துள்ளனர். மூவாயிரம் சிவிலியன்கள் மரணமடைந்துள்ளனர். இந்தியாவுக்கான ஆப்கானிய தூதுவர், தலிபான்கள் வன்முறையைக் கைவிட வேண்டுமென்றும் இரத்தம் சிந்துதலுக்கு முடிவு காணப்பட வேண்டுமென்றும் தன் நேர் காணலில் குறிப்பிட்டுள்ளார்.

Tue, 07/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை