ஆப்கான் அரசு – தலிபான்களுக்கு இடையே உயர்மட்ட பேச்சு ஆரம்பம்

ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்திருக்கும் நிலையில் ஆப்கான் அரசு மற்றும் தலிபான்களின் மூத்த பிரதிநிதிகள் டோஹாவில் சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

கட்டார் தலைநகரில் இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும் விலகுவதுமாக கடந்த பல மாதங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், ஆப்கானில் தலிபான்களின் தாக்குதல் அதிகரித்திருக்கும் சூழலில் அந்தப் பேச்சுவார்த்தைகள் வலுவிழந்து காணப்படுகிறது.

ஆப்கானில் இருந்து வெளிநாட்டு படையினர் வெளியேற தயாராகி வரும் சூழலிலேயே அங்கு திலிபான்கள் அரச படைக்கு எதிராக முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

இதில் அரச தூதுக்குழுவில் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருந்த அல்துல்லா அப்துல்லா உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். தற்போது ஸ்தம்பித்துள்ள பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கு அரசாங்க பிரதிநிதிகள் தமது ஆதரவை வெளியிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் டொஹாவில் உள்ள தலிபான் அரசியல் அலுவலகத்தின் பேச்சுவார்த்தையாளர்களுடன் இணைந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பல மணிநேர அமர்வுக்கு பின்னர் பேச்சுவார்த்தைகள் அடுத்து தினம் (நேற்று) தொடரவிருப்பதாக ஆப்கான் அரச பேச்சுவார்த்தைக் குழுவின் பேச்சாளர் நாஜியா அன்வாரி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தார்.

'ஆப்கான் பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தையிலேயே தங்கியுள்ளது. பேச்சுவார்த்தை மூலமே அமைதியை எட்ட முடியும்' என்று ஆப்கான் அரச பிரதிநிதி பிரைதூன் க்வாசூ ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். மறுபுறம் தலிபான் பேச்சாளர் முஹமது நயீம் கூறும்போது, தமது குழு 'பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதை தொடர்ந்து உறுதி செய்துள்ளது' என்றார். பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு துருப்புகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேறுவதன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தலிபான் நாடு முழுவதும் விரைவான மற்றும் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தலிபான்கள் கைப்பற்றி இருக்கும் பாகிஸ்தானுடனான முக்கிய எல்லைக் கடவையான ஸ்பின் பொல்தக்கை மீட்பதற்கு ஆப்கான் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இந்த எல்லையானது ஆப்கான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பிரதான போக்குவரத்து மற்றும் வர்த்தகப் பாதையாக உள்ளது. இது ஆப்கான் அரசின் முக்கிய வருவாய் மூலமகாவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தலிபான்கள் நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி பல டஜன் மாவட்டங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையிலேயே அண்மைய வாரங்களில் தெற்கு எல்லையில் மோதல் உக்கிரமடைந்துள்ளது.

தலிபான்கள் அண்மைய வாரங்களில் ஈரான், உஸ்பகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானுடனான எல்லைக் கடவைகளை கைப்பற்றிய நிலையில் நாட்டின் வடக்கிலும் தமது பிடியை இறுக்கியுள்ளனர். தலிபான்கள் தற்போது நாட்டின் 50 வீதத்திற்கும் அதிகமான பகுதியை கைப்பற்றி இருப்பதாகவும் தலைநகர் காபுலை நெருங்கி வருவதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Mon, 07/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை