கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் நிலையில்!

பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவிப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பிக்கும் போது எழுந்த சர்ச்சையின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். விவாதத்தின் ஆரம்பத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்காருக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து அவர் பிரேரணையை முன்வைக்காது விவாதத்தில் உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த சபை முதல்வரான அமைச்சர் தினேஸ் குணவர்தன, விவாதத்தை ஆரம்பிக்க முன்னர் அந்தப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் மரிக்கார் எம்.பி அதனை முன்வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதன்படி மீண்டும் அந்தப் பிரேரணையை முன்வைப்பதற்கு சபாநாயகர் மரிக்காருக்கு அனுமதி வழங்கினார்.இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த அமைச்சர் விமல் வீரவன்ச, ஒரே விவாதத்தில் இரண்டு தடவைகள் ஒருவருக்கு பேசுவதற்கு அனுமதி வழங்க முடியாது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் பிரசன்ன ரணவீரவும் தனது ஆட்சேபணையை முன்வைத்தார்.

இதன்போது சபையில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அது தொடர்பில் குறிப்பிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது.

இதனால் எதிர்க்கட்சியினருக்கு அதனை முன்வைக்க அனுமதி வழங்குவோம் என்றார்.

பிரதமரின் இந்த அறிப்பை தொடர்ந்து ஆளும் தரப்பின் அனைத்து எம்.பிக்களும் அமைதியாக இருந்ததுடன், நம்பிக்கையில்லா பிரேரணையை மரிகார் எம்.பி. சபையில் சமர்ப்பித்தார்.

 ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 07/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை