தோட்ட கம்பனிகளுக்கு சார்பாகவே தொழில் அமைச்சும் செயற்படுகிறது

பாராளுமன்றில் வடிவேல் சுரேஷ் எம்.பி குற்றச்சாட்டு

தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக காட்டுமிராண்டி போக்கில் நடந்துக்கொள்கின்ற இச் சந்தர்ப்பத்தில் தொழில் அமைச்சு கண்டுக்கொள்ளாது பாரபட்சமாக செயற்படுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றம்சுமத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அதிகமாக மலையக மக்களே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒருபுறத்தில் பெருந்தோட்ட கம்பனிகளின் கடுமையான காட்டுமிராண்டித்தனமான நிர்வாகம் தொடர்வதுடன், மறுபுறத்தில் அரசாங்கம் வானத்தை எட்டுமளவு எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதால் தோட்டத் தொழிலாளர்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை முன்னெடுப்பதற்காக வைத்துள்ள திட்டங்களை அரசாங்கம்தான் கூற வேண்டும். எரிபொருள் விலை உயர்வுகான வரைவிலக்கணம் அல்ல எமக்குத் தேவை. அதற்கான நிவாரணமே அவசியமாகும்.

பெருந்தோட்டக் கம்பனிகள் நாட்டின் சட்டத்தை மீறி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கபோகும் நடவடிக்கை என்னவென கேட்க விரும்புகிறோம். மலையக மக்கள் வேறு அரசாங்கத்தை சார்ந்தவர்களா?. ஒரு நாடு ஒரு சட்டம் என்றால் தொழில் அமைச்சு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் ஏன் அநீதியை இழைக்கிறது. தொழில் அமைச்சும், ஜனாதிபதியும், பிரதமரும், பாராளுமன்றமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பதில் கூறியே ஆகவேண்டும்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Tue, 07/20/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை