கொரோனா கட்டுப்பாடுகளை முற்றாக நீக்கியது பிரிட்டன்

பிரிட்டனில் கொரோனா பெருந்தொற்று தொடர்பிலான முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி உட்பட அனைத்து கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் நீக்கியுள்ளது.

பிரிட்டனில் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதிய வைரஸ் திரிபுகளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சூழலில் இந்த முடிவு பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் கட்டாய முகக்கவசம் மற்றும் வீட்டில் இருந்து பணியாற்றும் சட்டங்கள் நீக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன.

இந்த தளர்வினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட இரவு விடுதிகளும் முதல் முறை திறக்கப்படுகின்றன. திரையரங்குகள் போன்ற ஏனைய உள்ளக அரங்குகளும் தனது முழு கொள்ளளவுடன் இயங்க அனுமதி கிடைத்துள்ளது.

எனினும் மக்களை அவதானத்துடன் இருக்கும்படி பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் உள்ள பெரியவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் இந்தத் துணிவுமிக்க முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து நோயின் தீவிரத்தை தணிக்கும் என்று பிரிட்டன் அரசு நம்புகிறது.

தடுப்பூசி போடாதவர்கள், இனியும் தாமதிக்காமல் அதைப் போட்டுக்கொள்ளும்படி ஜோன்சன் வலியுறுத்தினார். பிரிட்டின் ஊடகங்களில் சில, இந்த நாளை, 'சுதந்திர தினம்' என்று வருணித்துள்ளன.

பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை, ஜோன்சன் தற்காத்துப் பேசியுள்ளார்.

இப்போது இல்லாவிட்டால், வைரஸ் பரவும் சாத்தியம் அதிகமுள்ள இலையுதிர் காலத்திலோ பனிக்காலத்திலோ அதைச் செய்ய வேண்டி இருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

 

பிரிட்டனில் கொரோனா தொற்றினால் சுமார் 129,000 பேர் உயிரிழந்திருப்பதோடு அது உலகில் ஏழாவது அதிக உயிரிழப்பு எண்ணிக்கையாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அந்நாட்டில் 48,161 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதோடு 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் பிரிட்டனில் தற்போது நாளொன்றுக்கு சுமார் 50,000 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகும் நிலையில் இந்த கோடைக்கு பின்னரான நாட்களில் அது 200,000ஐ எட்டக்கூடும் என்று சில விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

எனினும் நாட்டில் 68 வீதத்திற்கு மேற்பட்ட பெரியவர்கள் தடுப்பு மருந்து போட்டிருக்கும் சூழலில் முன்னர் கொரோனா தொற்று உச்சம் பெற்றிருந்த போது உள்ளதை விடவும் உயிரிழப்புகள் மற்றும் நோய் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tue, 07/20/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை