ஜப்பானில் அவசர நிலையை மேலும் விரிவுபடுத்த திட்டம்

ஜப்பானில் அதிகரித்துவரும் நோய்ப்பரவல் காரணமாக, இன்னும் கூடுதலான பகுதிகளில் அவசரநிலையைப் பிறப்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிபா, கனகாவா, ஒசாக்கா, டோக்கியோவை எல்லையாகக் கொண்ட சைத்தாமா ஆகிய வட்டாரங்களில் அடுத்த மாத இறுதிவரை அவசரநிலை பிறப்பிக்கப்பட வேண்டுமென, பொருளியல் அமைச்சர் யாசுட்டோஷி நிஷிமுரா தெரிவித்தார்.

டோக்கியோவில் நடப்பில் உள்ள அவசரநிலை அதே காலக்கட்டத்துக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிபுணர்க் குழு அந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை ஜப்பானில், புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை முதல்முறையாகப் 10,000ஐத் தாண்டியது.

தலைநகர் டோக்கியோவில் மட்டும் ஒரே நாளில் 3,800க்கும் மேற்பட்டோருக்குக் வைரஸ் தொற்று உறுதியானது.

டோக்கியோவில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் அதிகரிப்புக்கும் தொடர்பில்லை என்று ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகா கூறிவருகிறார்.

ஒலிம்பிக் விளையாட்டுகளை ரத்து செய்யுமாறு, அவரது இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Sat, 07/31/2021 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை