மன்னார் மறைமாவட்ட குருமுதல்வராக அருட்பணி கிறிஸ்துநாயகம் அடிகளார் நியமனம்

மன்னார் மறைமாவட்ட குருமுதல்வராக அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை நியமித்துள்ளார். கடந்த 15 வருடங்களுக்குப் பின் தற்பொழுது இப் புதிய குருமுதல்வர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்டத்தில் ஆயரினால் வழங்கப்படும் பங்குத் தந்தையர்களின் வருடாந்த இடமாற்றம் தற்பொழுது மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் வியாழக்கிழமை (08.07.2021) வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்டத்துக்கு நடப்புவருட புதிய குருமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் மன்னார் மறைமாவட்டத்துக்கு மூன்றாவது குருமுதல்வராவார்.

மன்னார் மறைமாவட்டத்தின் முதலாவது குருமுதல்வர் அருட்பணி எ.சேவியர் குரூஸ் அடிகளார் 24.01.1981 லிருந்து 18.08.2006 வரையும். பின் அருட்பணி எ.விக்ரர் சோசை அடிகளார் 19.08.2026 லிருந்து இற்றைவரையும் குருமுதல்வராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நியமனம் பெற்றுள்ள புதிய குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் மன்னார் நானாட்டான் பகுதியைச் சேர்ந்தவர். இவர் நானாட்டான் பாடசாலையில் க.பொ.த.சாதாரண வகுப்புவரை கற்றவுடன் உயர்தர கல்வியை மன்னார் புனித.சவேரியார் ஆண்கள் கல்லூரில் கற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து இவர் யாழ் புனித மாட்டீனார் சிறிய குருமடத்தில் தனது குருமட கல்விக்கான ஆங்கில கல்வியைத் தொடர்ந்து குருமடக் கல்வியை ஏழு வருடங்கள் கொழும்புத்துறை புனித.சவேரியார் குருத்துவக் கல்லூரியில் கற்றபின் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையினால் 1995ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

(தலைமன்னார் விஷேட நிருபர் )

Sat, 07/10/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை