பலூசிஸ்தான் அபிவிருத்தி வெறும் கண்துடைப்பு

பலூசி பொருளாதார நிபுணர்கள் கவலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் கண் துடைப்பாக இருக்கின்றன என பலூசிஸ்தான் மக்கள் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை அவ்வப்போது அறிவித்தாலும் அவை முழுமையாக செயற்படுத்தப்படுவதில்லை என்றும் அல்லது விளம்பரங்களுடன் நின்று விடுவதாகவும் பலூசி பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2017ம் ஆண்டு ஒரு குவைத் முதலீட்டு நிறுவனம் குவேட்டா மற்றும் பொஸ்டான் பகுதிகளில் இரண்டு சூரியசக்தி மின் நிலையங்களை அமைப்பதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டது. ஆனால் மத்திய அரசுமட்டத்தில் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் இப்போதும் அத்திட்டம் ஊசலாடிக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டும் அவதானிகள், விளம்பரத்தில் மட்டுமே – இத்திட்டம் இப்போதும் காட்டப்பட்டு வருகிறது என்கிறார்கள். பின்தங்கிய மாநிலமான பலூச்சிக்கு நீண்டகால பலனும் வேலை வாய்ப்புகளும் தரக்கூடிய திட்டங்களே அவசியம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

சீன பாகிஸ்தான் பொருளாதார திட்டம் பலூசிஸ்தானில் அபிவிருத்தியை கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டபோது கடந்த அரசு பலூசிஸ்தான் விடயத்தில் அலட்சியமாக நடந்து கொண்டது. தற்போது பொருளாதார அபிவிருத்தி மண்டலங்கள் உருவாக்கப்படும் என்றும் 600 மில்லியன் ரூபா நிதியை மத்திய அரசு தெற்கு பலுச்சிஸ்தானுக்கு ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டாலும் மக்களின் வறுமை நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹப் பகுதியில் 2287.844 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மண்டலம் ஆரம்பிக்கப்படும் எனச் சொல்லப்பட்ட போதிலும் 22,400 மில்லியன்களே செலவிடப்பட்டிருப்பதாகவும் இவ் வருடம் 300 மில்லியன் மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இத்தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தென் பலூசிஸ்தானுக்கு 600 மில்லியன் ரூபாவை அடிப்படை கட்டுமான அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக பாக். நிதியமைச்சர் வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்திருந்தபோதிலும் உண்மையாக ஒதுக்கீடு செய்யப்பட்டது 20 பில்லியன் மட்டுமே என பொருளாதார அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Sat, 07/10/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை