ஜெர்மனி, பெல்ஜியத்தில் வரலாறு காணாத மழை; வெள்ளத்தினால் 70 பேர் உயிரிழப்பு

ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் வரலாறு காணாத கடும் மழையை அடுத்து ஆறுகள் பெருக்கெடுத்ததில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்திருப்பதோடு ஜெர்மனியின் ஒரு பிராந்தியத்தில் மாத்திரம் சுமார் 1,300 பேர் காணாமல்போன நிலையில் உள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவை தாக்கி இருக்கும் இந்த வெள்ளம் காரணமாக பாரிய மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வேகமாக நகரும் கட்டுக்கடங்காத வெள்ள நீர் மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனியின் சிறு நகர்கள் மற்றும் கிராமங்களுக்குள் நுழைந்த நிலையில் கட்டிடங்கள் இடிந்து மக்கள் நிர்க்கதியாகினர். இதில் 58 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டபோதும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தவிர, பெல்ஜியத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். லக்சம்பேர்க் மற்றும் நெதர்லாந்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஜெர்மனியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ரினலான்ட்-பலடின்டே பிராந்தியத்தில் 1,300 பேர் வரை காணமல்போயிருப்பதாக அந்த பிராந்திய உள்ளூர் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

'சில பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் இவ்வளவு மழை பெய்ததை நாம் பார்த்ததில்லை' என்று ஜெர்மனி காலநிலைச் சேவையின் பேச்சாளர் அன்ட்ரீஸ் பிரிட்ரிச் சி.என்.என் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். 'சில பகுதிகளில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான மழை பெய்தது வெள்ளத்தை ஏற்படுத்தி இருப்பதோடு துரதிருஷ்டவசமாக சில கட்டடங்களும் இடிந்துள்ளன' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரினலான்ட்-பலடின்டேவுடன் வடக்கு ரினே-வெஸ்ட்பலியா மற்றும் சார்லான்ட் பிராந்தியங்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரிட்ரிச் தெரிவித்தார். கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை காலை வரை கட்டுக்கடங்காத இந்த கனத்த மழை மேற்கு ஜெர்மனியில் பொழிந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் தொடர்ந்து அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் நேற்று தெரிவித்திருந்தது.

நிர்க்கதியான குடிமக்களுக்கு உதவ பொலிஸ் ஹெலிகொப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீட்பு உதவியை எதிர்பார்த்து பலரும் கூரைக்கு மேல் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து இணைப்புகள் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் மேற்கு ஜெர்மனியில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பெல்ஜியத்தின் வெர்விர் நகர வீதியில் வேகமாக ஓடும் வெள்ள நீரில் கார்கள் அடித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் இணைதளத்தில் வெளியாகியுள்ளன. பெல்ஜியத்தின் மூன்றாவது மிகப்பெரிய நகர்ப்புற பகுதியான லீகேவில் இருந்து மக்களை வெளியேறும்படி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெளியேற முடியாதவர்கள் உயர்ந்த இடங்களில் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் உயிரிழப்புகள் பதிவாகாதபோதும் மியுஸ் நதியை அண்டிய சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தெற்கு மாகாணமான லிம்பர்க்கில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

Sat, 07/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை