பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க மக்கள் நிதியுதவி

முதற்கட்டமாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க ஏற்பாடு

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டர் பதிவு

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளானமையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் அமெரிக்க மக்கள் 1,00,000 அமெரிக்க  டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

பேர்ள் கப்பல் தீவிபத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுசூழல் தாக்கங்களை தணிக்க உதவுவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க துணைநிலைத் தூதுவர் மார்ட்டின் கெலி , இந்த உடனடி உதவியானது வாழ்வாதாரங்களுக்கு உதவும் என்பதுடன், தற்போதைய இந்த நிலைமையை தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழ்நிலையை சமாளிக்க மீனவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்து தொடர்பான பதிலளிப்பு முயற்சிகளுக்கு உதவும் நிமித்தம் 1,00,000 அமெரிக்க டொலர்களை உடனடி உதவியாக அமெரிக்க மக்கள் வழங்குகின்றனர்.

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலானது சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் பிளாஸ்டிக் சிதைவுகளையும் இரசாயன கழிவுகளையும் வெளியேற்றி, கடலோர வளங்களையும் அருகிலுள்ள மீனவ சமூகங்களின் வாழ்வாதாரங்களையும் ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்த உதவியானது தற்போதைய அவசரநிலையினால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியை வழங்கும் என்பதுடன், பதிலளிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது அளிக்கப்பட்டு வரும் ஒத்துழைப்பையும் விரிவுப்படுத்தும். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் செயல்படுத்தும் பங்காளர்களின் ஊடாக அமெரிக்கா இந்த உதவியை வழங்குகிறது.

கடல் சார்ந்த அனர்த்த பதிலளிப்பு தொடர்பான பயிற்சி உட்பட உள்நாட்டு அவசரநிலை பதிலளிப்பு ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ளும் நிமித்தம் அமெரிக்காவும் இலங்கையும் பல வருடங்களாக பணியாற்றியுள்ளன.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை முகாமைத்தும் செய்ய மற்றும் குறைக்க உதவும், மற்றும் அனர்த்தங்களுக்கு தயார்படுத்திக் கொள்ளவும் அவற்றிலிருந்து சிறப்பாக மீட்சி பெறவும் சமூகங்களுக்கு உதவும் நிதியளிப்புகளை அமெரிக்க வனவள சேவை, மற்றும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் என்பனவும் வழங்குவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Sat, 06/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை