3,400 ஒக்சி மீற்றர்களுடன் பாணந்துறையில் மூவர் கைது

இரத்தத்தில் ஒட்சிசன் அளவை கணிக்கும் 3400 ஒக்சிமீற்றர்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை - வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கொழும்பு -12 பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஒக்சி மீற்றர்களை சுங்க சட்டவிதிகளுக்கு புறம்பாக நாட்டுக்கு எடுத்து வந்துள்ளதுடன், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபையிடமும் அனுமதி பெற்றுக் கொள்ளாமலே அவற்றை வைத்திருந்துள்ளனர். அந்த உபகரணங்களை அதி கூடிய விலைக்கு விற்பனை செய்ய அவர்கள் திட்டமிட்டுருந்ததாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வெள்ளவத்தை,முகத்துவாரம் மற்றும் கொழும்பு -12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது ஒருவரிடமிருந்து 1000 ஒக்சி மீற்றர்களும் ஏனைய சந்தேக நபர்களிடமிருந்து தலா 1200 ஒக்சி மீற்றர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இந்த ஒக்சி மீற்றர்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திய வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். அதற்கமைய இரு கார்களும் வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலானை மத்திய ஊழல் தடுப்பு பிரிவுடன் இணைந்து, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.

Sat, 06/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை