மர்ஜான் ஹாஜியாரின் முயற்சியால் அதிக முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு

அமைச்சர் பியல் நிஷாந்த புகழாரம்

களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் ஹாஜியாரின் கடும் அழுத்தங்களால் இம்மாவட்டத்தில் அதிகமான முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்த முடிந்ததாக கல்விச் சேவைகள் அமைச்சரும் களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பியல் நிஷாந்த தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில், பேருவளை பிரதேச முஸ்லிம் தேசியப் பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இங்கு அறிவுஜீவிகள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில். அரசின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் பணிகள் மிக நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம் பெற்றன. இந்த நிலைமையால் களுத்துறை மாவட்டத்திலிருந்து ஒரு பாடசாலையை மாத்திரமே தெரிவு செய்ய முடியுமாக இருந்தது.

எனினும் இம்மாவட்டத்தின் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் ஹாஜியார், அனைத்துப் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக்க வேண் டும் என எனக்கு அழுத்தங்களைத் தந்து கொண்டிருந்தார். சிறந்த நண்பர்கள் சகோதரர்களாக நாங்கள் தொடர்புகளை வைத்துள்ளோம். அவரது வேண்டுகோளை என்னால் நிராகரிக்க முடியவில்லை. அதனால் நான் உயர் மட்டங்களோடு, அதிகாரிகளோடு பேசி அவரால் சிபாரிசு செய்யப்பட்ட களுத்துறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக தர முயர்த்தினேன்.

இப்பிரதேசத்தில் முஸ்லிம் நண்பர்களுடன் நான் ஒன்றாக கல்வி கற்றுள்ளேன். ஆனால் எங்களுக்குள் எந்த பேதங்களும் இருந்ததில்லை. எனவே பிரதேச முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார விடயங்களில் தொடர்ந்தும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன்.

இன்று தேசிய பாடசாலைகள் பெயர் பலகைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் பல்வேறு எண்ணிலடங்காத குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால் என்னுடைய பதவிக்காலத்தில் தேசிய பாடசாலைகள் அனைத்துக்கும் உரித்தான சகல வசதிகளையும் வழங்கி மாணவர்களின் கல்வி முன்னேற்றறத்துக்கு பங்களிப்புச் செய்வேன். குறிப்பாக இப்பிரதேச முஸ்லிம் தேசியப் பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Tue, 06/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை