பயணக்கட்டுப்பாட்டை மீறி தொழுகை நடத்திய யாழ். முஹம்மதியா பள்ளி நிர்வாகிகள் வக்பு சபையினால் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் கலீபா அப்துல் காதர் (நாவலர் வீதி) வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும் ஆப் பள்ளிவாசலின் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புதாரிகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்து விஷேட நிருவாக குழுவொன்றை நியமனம் செய்வதற்கு இலங்கை வக்பு சபை தீர்மானித்துள்ளது.

இப்பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை கொவிட் 19 பயணக் கட்டுப்பாடுகளை மீறி தலைவர் உட்பட 14 நபர்கள் பள்ளிவாசலில் ஒன்று கூடி இருந்தமையின் காரணமாக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இப்பள்ளிவாசலின் தலைவர் உட்பட நிருவாகிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் சட்டங்களை மீறி நடந்துள்ளதாலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பகிரங்க அறிவித்தல்களுக்கு மேலதிகமாக இப்பள்ளிவாசலின் தலைவரை திணைக்கள உத்தியோகத்தர்கள் நேரில் சந்தித்து எச்சரிக்கை செய்திருந்தும் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்திருப்பது மிகவும் கவலை தருகிறது.

சகல பள்ளி நிருவாகிகளும் கொவிட் 19 சுகாதார வழிமுறைகளையும் பயணக் கட்டுப்பாட்டினையும் கருத்தில் கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் பள்ளிவாயல்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவும். நிவாரணப் பணிகளுக்காக அவசியப்பட்டால் பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன் நிருவாகிகள் மாத்திரம் ஒன்று கூடலாம். அதான் சொல்வதற்காகவும் கொவிட் 19 அல்லது நிவாரணம் தொடர்பான விஷேட அறிவித்தல்களைச் செய்யவும் முஅத்தின் அல்லது இமாம் மாத்திரம் பள்ளிவாசலில் நுழைய அனுமதிக்கப்படலாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் அறிவித்துள்ளார்.

Tue, 06/08/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை