பாக். அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை நாடும் சீனா

சீன - பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதைத் திட்டத்தின் கீழ் பல மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களை பாகிஸ்தானில் செயல்படுத்தி வரும் சீனா, பாகிஸ்தான் அரசியல் கட்சிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

சீனா நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை குறித்த கால எல்லைக்குள் முடிப்பதில் எதிர்கொள்ளப்படும் தடைகளை நீக்கும் வகையிலேயே, மத்திய அரசை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் அரசியல் கட்சிகளுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்த சீனா முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

"சீனா, - பாகிஸ்தான் பொருளாதார திட்டங்களை உயர்தர அபிவிருத்தித் திட்டங்களாக்குவதற்கு அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து பரிமாற்றம், மற்றும் கொள்கைப் பகிர்வு என்பன பொருத்தமான சூழலை ஏற்படுத்தும். எனவே அரசியல் கட்சிகளின் கூட்டு ஆலோசனை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தலாம்" என்று பாகிஸ்தானுக்கான சீனத் தூதுவர் நொங் ரொங் தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தொடர்பாக பாகிஸ்தான் சீனா நிலையம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இப்பொருளாதார திட்டத்தின் கீழ் கடந்த அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களை ஊழல் நடந்திருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் இம்ரான்கான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து பெரும்பாலான சீன முதலீட்டுத் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டைகளை போட்டு வருவதால் ஸ்தம்பித நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே சீனா, பாக். கட்சிகளுடன் நேரடியாகப் பேச முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளின் ஆதார நலன்களையும், பிரதான விஷயங்களையும் இரு நாடுகளும் அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருக்க வேண்டும். சீன - பாக். ஒத்துழைப்புக்கான அரசியல் தளமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசியல் கட்சிகள் தம்மை அர்ப்பணித்துக் கொள்வதில் நாம் அவற்றுக்கு உறுதுணையாக இருப்போம் என சீன தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thu, 06/24/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை