வகுப்புகளை நடத்தி பணம் வசூலிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா

தற்போதைய கொரோனா இடர்காலத்தில் மாணவர்களிடம் பணம் வசூலித்து வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா அறிவித்துள்ளார்.

இவ்வாறான ஆசிரியர்களது பெயர்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். கொரோனா தொற்று அச்சத்தினால் பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டபோதிலும், எவ்வித குறைவுமின்றி உரியகாலத்தில் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பாடசாலை நடைபெறும் காலத்தில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து மற்றும் சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட எவ்வித செலவும் தற்போது ஏற்படுவதில்லை. ஆனால் பெற்றோர்கள் வாழ்வாதாரத்தொழிலை இழந்து தவிக்கின்ற பரிதாபகரமான சூழ்நிலையில், தமது பொறுப்புக்களை மறந்து ஆசிரியர்கள் செயற்படுவது வேதனையளிக்கிறது.

ஆசிரியர்கள் காலை 7.30 மணிதொடக்கம் 2.10 மணிவரை பாடசாலையில் வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை இலவசமாகக் கற்பித்து நிறைவு செய்யவேண்டிய கடமைப்பொறுப்பு உள்ளது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

அதற்குத் தேவையான தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்த வேண்டுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறிருக்க பிரத்தியேகமாக மாணவர்களிடமிருந்து பணத்தை அறவிட்டு கற்பித்தலில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது என்றார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர

Mon, 06/14/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை