நிதியமைச்சராக பசில் ராஜபக்‌ஷ ஜூலை 6ல் சத்தியப்பிரமாணம்?

அரசாங்க வட்டாரங்களிலிருந்து தகவல்

அமெரிக்காவிலிருந்து நேற்று முன்தினம் நாடு திரும்பிய பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்து கொள்ளும் அதே தினத்தில் பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னிலையில் அவர் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொது ஜன பெரமுன தேசியப்பட்டியல் எம்பியாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பார் என்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தமது எம்பி பதவியை இராஜினாமா செய்யவுள்ள நிலையில் அந்த வெற்றிடத்திற்கே பசில் ராஜபக்‌ஷ நியமிக்கப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டு அங்கு ஒரு மாதத்திற்கு அதிக காலம் தங்கியிருந்தார். அதனையடுத்து அவர் நேற்று முன்தினம் மீண்டும் நாடு திரும்பினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அவர் பதவி வகித்திருந்தார். பஸில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவி யேற்ற பின்னர் எரிபொருள் விலைக் குறைப்பு இடம் பெறும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Sat, 06/26/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை