இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ குருமார்களது குடும்பங்களுக்கும் 5,000ரூபா வழங்க ஏற்பாடு

பிரதமர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

பயணத்தடை காரணமாக வருமானம் இழந்துள்ள இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதகுருமாரின் வருமானத்தில் தங்கி வாழ்கின்ற குடும்பங்களுக்கு 5,000 ரூபா உதவித்தொகையை  வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பிரதமரும் புத்தசாசன , மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைவாக அமைச்சின் செயலாளரால் சமுர்த்தி, வதிவிடப் பொருளாதாரம், நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வணிக ,கொவிட்19 நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கிராமசேவகர்களிடமிருந்து இந்து குருமார்கள் தங்களது இந்துக் குருமார் அடையாள அட்டையை அல்லது ஆலய அரங்காவலரிடம் குருமாரென உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தை காண்பித்து 5,000 ரூபா உதவித்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, வருமானம் இழந்த இந்து குருமார்கள் உரிய கிராம உத்தியோத்தரை தொடர்புகொண்டு உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதமரின் இந்துமத அலுவல்களுக்கான இணைப்புச் செயலாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

 

 

Thu, 06/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை