நல்லாட்சி அரசு 05 ஆண்டுகளில் நாட்டை தரிசு நிலமாக மாற்றியது

மஹிந்த சிந்தனையின் கீழ் அன்று திட்டமிடப்பட்டு 2015இல் அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலத்துடனான அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள் ஆரம்பிக்கப்படவிருந்த நேரத்தில் எமது அரசாங்கம் தோல்வியடைந்தது. ஆனால் அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் 05 ஆண்டுகளில் நாட்டை ஒரு தரிசு நிலமாக மாற்றியதாக கிராமப்புற சாலைகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான 16.4 கிலோமீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 06 மேம்பாலங்களின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றபோது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வீதிகளில் அன்றாடம் காணப்படும் இந்த போக்குசரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான திட்டங்கள் எப்போது ஆரம்பிக்கப்பட போகின்றது என்றே ஜனாதிபதி எப்போதும் கேட்பார். இந்த வீதிகளில் பெரும்பாலானவை வெளிநாட்டுக் கடன் உதவி ஒப்பந்தங்களின் கீழ் செயற்படுத்தப்படுகின்றன. அதனால் இவை தாமதிக்கப்படுமானால் நாட்டு மக்களின் பணத்தையே இறுதியில்
செலுத்த வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களை தயார் செய்திருந்தார்.

மஹிந்த சிந்தனையின் கீழ் அன்று திட்டமிடப்பட்டு 2015இல் ஆரம்பிக்கப்படவிருந்த நேரத்தில் எமது அரசாங்கம் தோல்வியடைந்தது. ஆனால் அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் 05 ஆண்டுகளில் நாட்டை ஒரு தரிசு நிலமாக மாற்றியது.

ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் காலப்பகுதியில் உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள வீதிகளின் அமைப்புக்கு சமானமான வீதி அமைப்பை இலங்கையில் நிர்மாணிக்க முடிந்தது. அதிவேக நெடுஞ்சாலை மாத்திரமன்றி அனைத்து வீதிகளும் கார்பட் அல்லது கொங்கிரீட் செய்வது வரை அபிவிருத்தி செய்யப்பட்டது என்றார்.

Fri, 06/11/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை