தேர்தல் முறை மாற்றம்; வெற்றி கொள்வது கடினம்

வேலுகுமார் எம்.பி தெரிவிப்பு

தனி தமிழ் தொகுதி, முஸ்லிம் தொகுதி என்ற அடிப்படையில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சவாலில் வெற்றிக்கொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.

இன்று நாட்டில் புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பித்திருக்கிறது.எதிர் வரும் மாகாண சபை தேர்தலுக்கான முறைமையாக மட்டும் இதனை நோக்க முடியாது.

மாகாண சபை தேர்தலுடன், இனி வரும் பொது தேர்தலுக்கான தேர்தல் முறையும் இதனுடன் தொடர்புபடுகின்றது.

இத்தேர்தல் முறை மாற்றத்தில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.

மறுபக்கம் பெரும்பான்மை சமூகத்திலுள்ள நாட்டின் சிறு கட்சிகளும் அதே சவாலுக்குள்ளாகின்றது. எனினும் தனி தமிழ் தொகுதி, தனி முஸ்லிம் தொகுதி என்ற அடிப்படையில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சவாலில் வெற்றிக் கொள்ள முடியாது.

தேர்தல் முறைமை தொடர்பாக பேசுகின்ற போது, அடிப்படையில் மூன்று முறைகளை எடுத்துக்காட்டலாம். தொகுதி வாரியான முறை, விகிதாசார முறை மற்றும் கலப்பு தேர்தல் முறை.

இவற்றில் பல்லினங்கள் வாழுகின்ற நாடுகளில் அதுவும் செறிந்து அல்லது பரந்து வாழுகின்ற போது விகிதாசார தேர்தல் முறையே அனைத்து சமூகங்களினதும் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்தும். அத்தகைய ஜனநாயக விழுமியம் கொண்ட அனைத்து சமூகங்களுக்கும், அதே போன்று பல்வேறு மாற்று கருத்துக்கள் கொண்டவர்களுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும் விகிதாசார முறையே இன்று நடைமுறையில் உள்ளது. இதனுடைய மாற்றம் ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தல்களுக்கு தடையான ஒன்றாக அமைவதற்கு இடமளிக்க கூடாது.

இச்சூழ்நிலையை நாம் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விகிதாசார தேர்தல் முறையை தக்க வைத்துக் கொள்வதற்கு கோட்பாட்டு ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி, தலைவர் மனோ கணேசனின் தலைமையில் விகிதாசார தேர்தலை, வளைய முறையில் (Zonal System) நடத்துவதற்குரிய முன்மொழிவுகளை செய்திருக்கின்றது. இம்முறை இன்று பலராலும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றது.

எனவே குறுகிய வட்டத்திற்குள் இருந்து, இன ரீதியான அடிப்படைகளை மையப்படுத்தி, எம்மை நாமே ஓரம் கட்டிக்கொள்ள கூடாது.

Tue, 05/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை