பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் வைத்தியசாலைக்கு நோயாளியை கொண்டுசெல்ல முன் அனுமதி தேவையில்லை

பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நாட்களில் நோயாளியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு முன்அனுமதி பெறவேண்டியதில்லை. சொந்த வாகனத்திலோ அல்லது பிற வாகனத்திலோ   பொலிஸ் முன் அனுமதியின்றி- கொண்டுசெல்ல முடியும்   என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பவர்கள் அடையாள அட்டைக்கு புறம்பாக, நிறுவன பிரதானியின் அனுமதி கடிதத்தையும் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், " நாட்டை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கிலேயே, சுகாதார தரப்பினரின் ஆலோசனையின் பிரகாரம் பயணத்தடையை தளர்த்தாது, 07 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் உரிய வகையில் பின்பற்றப்படுமானால் 08 ஆம் திகதிக்கு பின்னர் கட்டம், கட்டமாக இயல்பு நிலைக்கு செல்லக்கூடியதாக இருக்கும். 

நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமெனில் எந்தவொரு அனுமதியும் தேவையில்லை. இக்காலப்பகுதியில் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கும்.   வாகனங்கள் மூலம் (டிலிவரி சேவை) நடமாடும் சேவைகளை முன்னெடுக்கும் தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். டிலிவரி சேவையை முன்னெடுப்பதற்கு 31 ஆம் திகதிவரை வழங்கப்பட்ட அனுமதி 07 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை புதுப்பிக்கவேண்டியதில்லை.  அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பவர்கள் அடையாள அட்டைக்கு புறம்பாக, நிறுவன பிரதானியின் அனுமதி கடிதத்தையும் வைத்திருக்க வேண்டும். ஸ்மார்ட் போனிலும் அதனை வைத்திருக்கலாம். அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்நடவடிக்கை " - என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Sat, 05/29/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை