பரீட்சைகள் ஒத்திவைப்பு செய்தியில் உண்மையில்லை

கல்வி அமைச்சு மறுப்புச் செய்தி

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை மீண்டும் ஒத்திப் போடுவதற்கான எந்தவித தீர்மானத்தையும் கல்வியமைச்சு மேற்கொள்ளவில்லை என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவித்துள்ள அவர், தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள நாட்களில் இரண்டு பரீட்சைகளையும் நடத்துவதே கல்வி யமைச்சின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

இவ் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மூன்றாம் திகதி நடத்துவதற்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் நடத்துவதற்கும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேவேளை தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் வழங்கப்படும் கல்வி நடவடிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கையாக வேறு வேலைத்திட்டம் ஒன்று தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/21/2021 - 07:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை