சட்டவிரோத குற்றம் புரிந்தவராக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை

மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று வீதி களை உபயோகித்து வேறு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவ்வாறான நபர்கள் சட்டவிரோதமான குற்றம் புரிந்தவர்கள் என கருதப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் கடுமையான சட்டம் பிரயோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்கள் அநாவசியமான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

மாகாணங்களின் எல்லைகளில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தேவையான அத்தியாவசிய சேவைகளை வழமைபோன்று பெற்றுக்கொள்ள முடியும்.

மாகாண எல்லைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலீசார் மற்றும் படையினருக்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும்.

சேவை நிறுவனங்களுக்கு பணிகளுக்காக சமூகமளிக்கும் நபர்களுக்கு அதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருக்கும் போது அந்த பிரதேசத்தில் பயணத் தடை முழுமையாக அமுலில் இருக்கும்.

அதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலீசார் கடமை சார்ந்த விடயங்களுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ அந்த பிரதேசத்தில் இருந்து வெளியே செல்வது தடை செய்யப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உற்சவங்கள், கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் நடத்துவோர் தொடர்பில் கடும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 31ஆம் திகதிவரை நாட்டில் கடமையில் உள்ள அனைத்து பொலீசாரினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பொலீசார் கடமைக்கு திரும்ப வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 05/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை