மாவட்டங்களுக்கு இடையிலும் பயணக் கட்டுப்பாடு வரும்

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை அரசாங்கம் விதித்துள்ள நிலையில் அத்தியாவசிய போக்குவரத்துகள் மாத்திரமே இடம்பெறும் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. தேவை ஏற்பட்டால் மாவட்டங்களுக்கு இடையிலும் கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதிவரை இந்த தீர்மானம் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளதாவது, முழு நாட்டையும் ஒரே நேரத்தில் முடக்கம் செய்யும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென்பதால் அநாவசியமாக பொது மக்கள் குழப்பமடைய வேண்டாம்.

நேற்று நள்ளிரவு தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் மாகாணங்களுக்குள்ளும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கைக்கு அமையவே மாகாணங்களுக்குள்ளே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

முழு நாட்டையும் முடக்கும் நோக்கம் இல்லை. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் தடை ஏற்படாதவகையிலேயே அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே எவரும் அநாவசியமாக அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பேருந்துகளை இயக்குமாறு போக்குவரத்து சபை அனைத்து டிப்போ கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணத்திற்குள் வழமை போன்று ரயில் மற்றும் பஸ் சேவைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 05/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை