வெளிநாட்டிலிருந்து வந்தோராலேயே இந்திய, பிரித்தானிய தொற்று பரவல்

தனிமைப்படுத்தல் சட்டம் மேலும் கடுமையாக்கப்படும்

இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள இந்தியா மற்றும் பிரித்தானியாவின் கொவிட்-19 வைரஸின் புதிய திரிபானது வெளிநாட்டிலிருந்து வருகைத்தந்தவர்கள் மூலமே பரவியுள்ளதால் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது நாட்டில் தினமும் அதிகளவான கொவிட்19 தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர். தற்போதைய சூழலில் தினமும் 2,500 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கிறோம். தற்போது பதிவாகும் நோயாளர்களையும்விட அதிகமானவர்கள் எதிர்காலத்தில் பதிவாகக்கூடும்.

கொவிட்19 தொற்றின் பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய திரிபானது வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவர் மூலமே இலங்கையில் பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய திரிபானது இந்தியாவிலிருந்து வந்​த இந்திய பிரஜை ஒருவரின் ஊடாகவே பரவியுள்ளது. அவருடைய உடலிலிருந்தே இங்குள்ளவர்களுக்கு பரவியுள்ளதை கண்டறிந்துள்ளோம்.

ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கடந்த காலத்தை காட்டிலும் மிகவும் கட்டுப்பாட்டுடன் தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்கம், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கையெடுத்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்களுக்கு கடுமையான தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவர். வருபர்கள் தடுப்பூசியை பெற்றிருந்தாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 05/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை