காபுல் நகர பாடசாலைக்கு அருகே குண்டு வெடிப்பு; 58 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்திருப்பதோடு காயமடைந்த குறைந்தது 150 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

ஷியா முஸ்லிம்கள் வாழும் டாஷ்டே பார்கி பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பு அந்தப் பகுதியை அதிரச் செய்தது. ஆப்கானின் மதச் சிறுபான்மையினராக இருந்த இந்த சமூகத்தை இலக்கு வைத்து கடந்த காலங்களில் இஸ்லாமிய அரசுக் குழு மற்றும் சுன்னி முஸ்லிம் போராட்டக் குழுக்கள் தாக்குதல் நடத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கார் குண்டு மற்றும் அந்தப் பகுதியில் வைக்கப்பட்ட இரு குண்டுகளால் இந்த வெடிப்புகள் இடம்பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.

இதில் கற்றலை முடித்து விட்டு வீடு திரும்பும் ஏழு அல்லது எட்டு சிறுமிகள் கொல்லப்பட்டவர்களில் இருப்பதாக பார்த்தவர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இந்தத் தாக்குதலில் பல பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் மீது குற்றம்சாட்டியபோதும், இதில் தமக்கு தொடர்பு இல்லை என்று தலிபான் பேச்சாளர் மறுத்திருப்பதோடு ஆப்கான் பொதுமக்கள் மீதான எந்த ஒரு தாக்குதலையும் அந்த அமைப்பு கண்டித்துள்ளது.

தற்போதை போர் மற்றும் வன்முறையை தடுக்க தவறி இருப்பது குறித்து ஆப்கான் அரசு மற்றும் மேற்குலக சக்திகள் மீது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்காக நேற்றைய தினத்திலும் பிரேத அறையில் இருந்து உடல்கள் பெறப்பட்டு வரும் அதேநேரம், சில குடும்பத்தினர் காணாமல்போனவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்திருக்கும் சூழலில் வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேறும் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/10/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை