வருட இறுதிக்குள் 32 மில்லியன் தடுப்பூசிகள்

- இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு 

இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முறையான திட்டமிடலுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய இவ்வருடம் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் 14 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளும் 13 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் 05 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் இலங்கைக்கு கிடைக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

ஸ்ட்புனிக் தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்துக்கும், சைனோபார்ம் தடுப்பூசிகளை குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கும் வழங்க எதிர்பார்த்துள்ளோம். இந்த இரு மாவட்டங்களிலும் ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ளல் மற்றும் அவற்றை நாட்டு மக்களுக்கு வழங்குவது தொடர்பிலான வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான சீன தூதுவருக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் மேலும் 05 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்கவுள்ளன. இது தவிர மேலும் 03 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளை ஜூன் மாதத்தில் அதாவது எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு வழங்க முடியும் என்றும் இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் சீன தூதுவர் அறிவித்திருந்தார். 

25 ஆம் திகதி 5 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும். மே மாதம் 08 ஆம் திகதி இலங்கையில் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனை இரண்டாம் கட்டமாக வழங்கும் பணிகளை ஜூன் மாதம் 08 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியும். 

இது தவிர 09 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் ஜூன் மாதம் கிடைக்கவுள்ளன. இவற்றில் முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்குமென எதிர்பார்க்கிறோம். எனவே, முதற்கட்டமாக ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட 15,000 பேருக்கு இரண்டாம் கட்டமாக வழங்கத் தேவையான மேலும் 15,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் இதன்போது கிடைக்கும். எனவே ஸ்புட்னிக் தடுப்பூசிகளை முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு உரிய காலத்தில் இரண்டாம் கட்டமாக வழங்குவதிலும் எவ்வித சிக்கலும் ஏற்படாது. 

அது மாத்திரமின்றி ஏனைய 50, 000 ஸ்புட்னிக் தடுப்பூசிகளை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி கண்டி மாவட்டத்திலுள்ள மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களில் கிடைக்கவுள்ள 09 இலட்சம் தடுப்பூசிகளை கண்டி மற்றும் ஏனைய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். 

எனவே கொவிட் -19 தடுப்பூசிகள் கிடைக்கும் அளவுக்கமைய அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற மாவட்டங்களை இலக்காகக் கொண்டு இவற்றை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.    

Mon, 05/24/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை