குடும்பத்திற்கு ரூ.20,000 வழங்க அரசிடம் மனோ M.P கோரிக்கை

 நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்கி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனோ கணேசன் எம்.பி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த மனோ எம்பி மேலும் தெரிவித்ததாவது, இதுவரை 6 நாடுகளின் கொரோனா வைரஸ்கள் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளன. இன்று கர்ப்பிணி தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள்.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர் மாதமளவில் 20,000 பேர் வரை மரணிக்கவும், தினசரி மரணம் 200 ஐ கடக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டில் மக்கள் தெருக்களில் செத்து மடியும் நிலைமையும் ஏற்படலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் கொரோனாவால், வயதானவர்கள் மட்டுமே சாவார்கள் என கூறப்பட்டது.

இன்று கர்ப்பிணிகள் சாகிறார்கள், குழந்தைகள் சாகிறார்கள். கொரோனா கிருமியின் வீரியம் அதிகரித்து விட்டது.

சீனா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, டென்மார்க், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் திரிபடைந்த கொரோனா கிருமிகள் இன்று எம் நாட்டில் உள்ளன.

இன்று நாட்டில் நாள் ஒன்றுக்கு 2600 நோயாளிகள் இனங்காணப்படுகிறார்கள். நேற்று முன்தினம் 22 பேர் மரணித்தார்கள். இவை கணக்கில் எடுக்கப்பட்டவை மட்டுமே. இவற்றை தவிர இன்னமும் உள்ளனவா என் தேடிப்பார்க்க வேண்டும்.

அரசாங்கம் நாட்டை முடக்க மறுப்பது ஏன்? நாட்டை மூடி விட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்க வேண்டும். நாளாந்த சம்பளம் பெறுவோர், சுய தொழில் செய்வோர் என எத்தனை குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கணக்கெடுப்பு செய்து, அனைத்து அபிவிருத்தி திட்டங்கள், புதிய வீதிகள், புதிய உடற்பயிற்சி ஜிம்கள் ஆகியவற்றை இடை நிறுத்தி வைத்து விட்டு, ஒரு குடும்பத்துக்கு 20,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

Tue, 05/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை