இந்திய கொவிட்-19 திரிபு 53 நாடுகளில் அடையாளம்

புதிதாக உருமாறியுள்ள பி.1.617 ரக கொரோனா வைரஸ் தற்போது 53 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. அது முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் பி.1.617 ரக வைரஸ் மேலும் 7 இடங்களில் காணப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அவற்றையும் சேர்த்து மொத்தம் 60 நாடுகளில் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பி.1.617 ரக வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக்கூடிய தன்மை வாய்ந்தது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது. எனினும், அதன் வீரியம், தொற்றின் அபாயம் ஆகியவை குறித்து ஆராயப்படுகிறது.

புதிதாக உருமாறிய 6 வகை கொரோனா வைரஸ்களும் கண்காணிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.

முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களுள் இரண்டு ரக வைரஸ்கள் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டன.

இதர வகை உருமாறிய வைரஸ்கள் பிரேசில், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டன. 

உலகளாவிய ரீதியில் கடந்த வாரத்தில் புதிய தொற்று சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக குறைந்துள்ளன. இதன்படி 4.1 மில்லியன் புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு மேலும் 84,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் முறையே 14 மற்றும் இரண்டு வீத வீழ்ச்சியாக உள்ளது.

இதில் ஐரோப்பிய பிராந்தியத்தில் கடந்த ஏழு நாட்களில் நோய்த் தொற்று சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் பெருமளவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக அந்தப் பிராந்தியத்தின் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டிருப்பதோடு அதற்கு அடுத்து தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அதிக வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

Thu, 05/27/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை