மணல் கொள்ளை; அரச அதிபர் சிரத்தையின்மை வேதனைக்குரியது

- பாராளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரம்

மட்டக்களப்பு மாவட்டத்தை பாதிக்கக்கூடிய பேசுபொருளாக இருப்பது மணல் அகழ்வுக் கொள்ளைக் கடத்தலாகும். ஆற்றுமணல் அகழ்வுக் கொள்ளைக் கடத்தலினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரோ அரசாங்க அதிபரோ கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இடம்பெறும் ஆற்றுமணல் அகழ்வுக் கொள்ளை தொடர்பாக வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆற்றுமண் படுக்கைகளை அளவுக்கு மீறி அகழ்ந்து மண் வியாபாரத்தை நடாத்துவதனால் பல பிரச்சினைகளும் ஆர்ப்பாட்டங்களும் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவர். தற்போது ஆற்றுமண் படுக்கைக்கு மேலாக வயல் காணிகளை திருத்தப்போகின்றோம் என்று அனுமதி பெற்று, வயல் காணிகளில் முப்பது அடிக்கு மேலாக ஆற்றுமணலை அகழ்ந்து கொண்டு செல்கின்றார்கள்.

ஒரு நாளைக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 1000 கனரக வாகனங்கள் வெளி மாவட்டங்களை நோக்கிச் செல்வது மாத்திரமல்லாமல் ரயில் (தொடரூர்ந்து) பெட்டிகளிலும் மண்ணை கொண்டு செல்கிறார்கள். இதனால் மட்டக்களப்பு மாவட்டம் எதிர்காலத்தில் அழிந்துவிடும் ஒரு நிலைமை இருக்கின்றது.

ஆறுகளில் அளவுக்கதிகமான ஆற்றுமணலை அகழும்போது ஆறு ஆழமாவதனால் வயல்களுக்கு ஆற்றுநீரைப் பாய்ச்சுவது மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கின்றது. செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கள்ள மண் ஏற்றும் வியாபாரம் மிகவும் தீவிரமாக இடம்பெறுவதனால், ஆற்றிலிருந்து வழமையாக நீர் பாய்ச்சும் வயல்களுக்கு நீரைப் பாய்ச்ச முடியாமல் ஆற்றுக்குள் இருந்து நீர் பெறும் நீர் பம்பிகளை பொருத்தி வயல்களுக்குள் நீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆறுகளை கவனிக்கும் நீர்ப்பாசன திணைக்கள

பொறியியலாளர்கள் பிரதேச, மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ஆற்றுமண் அகழ்வுக் கொள்ளைக் கடத்தல் இடம்பெறுவதை கண்டனத்துக்குரிய செயலாக கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.

பொண்டுகள்சேனை செல்லும் வழியிலுள்ள மிகப் பிரதான பாலத்தின் அத்திவாரம் ஏழு அடி மண்ணிற்குள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது அந்தப் பிரதேசத்திலேயே தொடர்ச்சியாக மணல் அகழ்வதால் இரண்டு அடியே மண்ணுக்குள் இருப்பதாகவும், தொடர்ச்சியாக அந்தப் பிரதேசத்தில் மணல் அகழும் நிலைமையிருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் பாலம் இடிந்துவிழும் நிலைமையும் காணப்படுகின்றது.

கடந்த போராட்ட காலங்களிலே வாகரை, செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, போரதீவுப்பற்று போன்ற பிரதேச செயலகங்கள் பாதிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படாமலுள்ள நிலையில், இவ்வாறான பிரதேசங்களிலேயிருந்து மணல் அகழ்ந்து வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதனால் அந்தப் பிரதேசத்தின் பாதைகள் சிதைவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது என்றார்.

(மண்டூர் குறூப் நிருபர்)

Fri, 04/16/2021 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை