தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன் விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

- பிரச்சினைகள் உள்ளடங்கிய மகஜரும் கையளிப்பு

ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் தலைமைத்துவம் வேண்டாம், பக்கச்சார்பான அதிகாரிகள் வேண்டாம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டுவில்-,  சந்திரபுரம் விவசாய அமைப்பின் பொருளாளர் தலைமையிலான பாதிக்கப்பட்ட தரப்பினர் நேற்று (19) திங்கட்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.  

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த விவசாய சம்மேளன பிரதிநிதிகள் "நிதி மோசடிக்காரர்களை முன் நிறுத்து; உடந்தையானவர்களை வெளியேற்று,  

சந்திரபுரம் விவசாய அமைப்பின் ஊழல், மோசடிகளை மூடி மறைக்கும் தலைமைத்துவம் வேண்டாம், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு சாவு மணி அடிக்காதே, நீதிக்கான குரலை நசுக்காதே பகிரங்க விசாரணை செய், 2011-/ 2019 .06.06வரையான தன்னிச்சையான சந்திரபுரம் விவசாய அமைப்பிற்கு முடிவு கட்ட வேண்டும், கமநலசேவைத் திணைக்களத்தின் பக்கச்சார்பான அதிகாரிகள் வேண்டாம். " உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  

போராட்ட நிறைவில் சந்திரபுரம் விவசாய அமைப்பின் பொருளாளரால் தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்று தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி உஷாவிடம் கையளிக்கப்பட்டது.  

அத்துடன் தமது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், அதற்கு சம்மேளன அங்கத்தவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

மகஜரின் பிரதிகள் விவசாய அமைச்சர், யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் மற்றும் யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  

சாவகச்சேரி விசேட நிருபர்  

Tue, 04/20/2021 - 16:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை