தடைக்கு விளக்கம்: அமெரிக்க தூதுவருக்கு ரஷ்யா அழைப்பு

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம்

ரஷ்யா தன் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறித்துப் பேச, மொஸ்கோவில் உள்ள அமெரிக்கத் தூதரை அழைத்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா மீது தடைகளை அறிவித்து, ரஷ்ய இராஜதந்திரிகள் 10 பேரை நாட்டைவிட்டு வெளியேற்றியதை அடுத்து ரஷ்யாவின் அழைப்பு வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது, இணைய ஊடுருவல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ரஷ்யா மீது அமெரிக்கா தடைகளை விதித்தது. இந்தத் தடை உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எடுத்துள்ள மிகக் கடுமையான நடவடிக்கையாக அது கருதப்படுகிறது.

எனினும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவில் பதற்றமான சூழலிலேயே இந்தத் தடை கொண்டுவரப்பட்டுள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னிக்கு நஞ்சூட்டிய விவகாரத்தில் ஏழு ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பல டஜன் ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடந்த மாதம் தடை விதித்திருந்தது. இந்த சம்பவத்தில் தமக்கு தொடர்பு இல்லை என்று ரஷ்யா கூறி வருகிறது. இத்தகைய நடவடிக்கை பற்றி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் ஏற்கனவே எச்சரித்துவிட்டதாக ஜனாதிபதி பைடன் கூறினார். எனினும் ரஷ்யா உடனான சர்ச்சையைப் பெரிதுபடுத்துவது அமெரிக்காவின் நோக்கமல்ல என்று பைடன் கூறினார். நிலையான இருதரப்பு உறவை ஏற்படுத்தவே தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அண்மையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசாங்கத் தொடர்புக் கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஊடுருவல் சம்பவத்தையும் ரஷ்யா வழிநடத்தியதாக வொஷிங்டன் குற்றஞ்சாட்டுகிறது.

Sat, 04/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை