ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சில் தாமதம்: தலிபான் மீது குற்றச்சாட்டு

அமைதிச் செயற்பாட்டில் தலிபான்கள் தயக்கம் காட்டியதன் காரணமாக துருக்கியின் ஸ்தான்பூல் நகரில் நடைபெறவிருந்த ஆப்கான் அமைதி மாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக அமைதிக்கான ஆப்கான் இராஜாங்க அமைச்சர் செய்யிது சதாத் மன்சூர் நதரி பாராளுமன்ற கீழவையில் தெரிவித்துள்ளார்.

துருக்கி மாநாடு தள்ளிப்போவதற்கு பிரதான காரணமே தலிபான்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.

‘அமைதிக்காக ஆப்கான் தரப்பு தயாராகவும் எதிர்பார்ப்புடனும் இருந்தபோதும் தலிபான்கள் தரப்பில் இருந்து அதற்கு எந்த விருப்பும் இல்லை’ என்று பாராளுமன்றக் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 24 ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த 10 நாள் ஸ்தான்பூல் அமைதி மாநாடு ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக துருக்கி அண்மையில் அறிவித்ததை அடுத்தே ஆப்கான் இராஜாங்க அமைச்சு இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஆப்கானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெறும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தலிபான்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்காது வெளிநாட்டு துருப்புகள் வெளியேறிய பின் நாட்டில் மேலும் வன்முறைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தலிபான்களுக்கு எதிராக உறுதியாக இருப்பதாகவும் தலிபான்கள் போரில் வெற்றிபெற மாட்டார்கள் என்று ஜனாதிபதி அஷ்ரப் கனி மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா முஹித் உட்பட ஆப்கான் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

Sat, 04/24/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை