நிரூபித்தால் ஒரு மணி நேரத்தினுள் அமைச்சு பதவியை துறப்பேன்

பாராளுமன்றில் அமைச்சர் பந்துல சூளுரை

ச.தொ.ச உட்பட சுப்பர் மார்க்கட்டுகளில் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த சலுகைப் பொதிகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை ஒரு மணி நேரத்தில் துறப்பேன் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பரிமாற்றங்கள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் புத்தாண்டு காலப்பகுதியில் பொது மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சலுகை பொதியொன்று ச.தொ.ச உட்பட சுப்பர் மார்க்கட்டுகளில் பெற்றுக்கொடுத்தோம். ஆனால், இந்த பொதியில் தரமற்ற பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களை கைதுசெய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த சலுகைப் பொதியின் பெறுமதி 1,400 ரூபாய் என்றாலும் 1,000 ரூபாவிற்கே மக்களுக்கு இதனை பெற்றுக்கொடுத்தோம். சலுகை பொதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சில தனியார் சுப்பர் மார்க்கட்டுகளில் பொருட்களில் விலைகள் குறைக்கப்பட்டதால் சலுகை பொதியை 1,301 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தது. மற்றுமொரு சுப்பர் மார்க்கட்டில் 1,333 ரூபாவுக்கு இந்த சலுகை பொதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. குறைந்தபட்சம் 300 ரூபாவேனும் மக்களுக்கு இலாபம் கிடைக்கும் அடிப்படையில்தான் சலுகை பொதி மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இவ்வாறு மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும்போது அதற்கு ஒத்துழைப்புகளை வழங்காவிடினும் குற்றச்சாட்டுகளை முன்வைக்காதிருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்னவென தெரியவில்லை. சலுகை பொதியில் இருந்த முகக் கவசமானது 14 ரூபாவாகுமென்றும் இதனை மொத்த சந்தையில் 07 ரூபாவுக்கு பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் கூறியுள்ளனர். முகக் கவசத்தில் 100 சதவீதம் இலாபத்தை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர். 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முகக் கவசத்தையே அதில் 14 ரூபாக்கு பெற்று உள்ளடக்கியுள்ளோம். இலங்கையில் எஸ்.எல்.எஸ். சான்றிதழ் உள்ள ஒரே முகக் கவசம் இதுவாகும். அத்துடன், பொதியில் உள்ள தேயிலை தூளில் நிறமூட்டிகள் கலக்கப்பட்டுள்ளதாகவும் சேறு பூசுகின்றனர்.

மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் சலுகைகளுக்கு அபக்கீரித்தியை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சமூக நீதிக்கான இயக்கம் கொம்பனிவீதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. முறைப்பாடுகளை செய்தது நாம் அல்ல. அத்துடன் சதொச நிறுவனத்தின் தலைவர், கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர், தேயிலை வழங்குனர் சபையும் கொம்பனிவீதி பொலிஸில் இதுதொடர்பில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார். எனக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அபகீர்த்திகளுக்கு எதிராக எனது சட்டத்தரணிகள் ஊடாக அழைப்பாணை அனுப்ப சொல்லியுள்ளேன்.

சலுகை பொதியில் ஊழல் - மோசடிகள் இடம்பெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால் ஒரு மணி நேரம் கூட பாராளுமன்றத்தில் இருக்க மாட்டேன் என்பதுடன் பதவியை இராஜனாமா செய்துவிட்டு செல்வேன்.மனசாட்சிக்கு உட்பட்டு அர்ப்பணிப்புடன் நாம் செயற்படுகின்றோம். ஆகவே, நான் எவரையும் கைதுசெய்யுமாறு கூறவில்லை என்றார்.

 

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 04/24/2021 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை