துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசியலமைப்புக்கு முரணானது

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசியலமைப்புக்கு முரணானது-Petition Against-Colombo Port City Economic Commission Bill

- சட்டத்தரணிகள் சங்கம், ஐ.தே.க. உள்ளிட்டோர் உச்சமன்றில் மனு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 'Colombo Port City Economic Commission' என அழைக்கப்படும்  குறித்த ஆணைக்குழு சட்டமூலத்தில் காணப்படும் சில விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி மனுதாரர்கள் தங்கள் மனுக்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப தொழில்வல்லுநர்கள் சங்கத்தின் தலைவரான பொறியாளர் ஜி. கபில ரேணுக பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சி (கட்சியின் பொதுச செயலாளர், தவிசாளர் சார்பில் இரு வெவ்வேறு மனுக்கள்), இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஆகியன இன்று (15) தங்களது மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இம்மனுக்களின் பிரதிவாதியாக சட்ட மாஅதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், அதனை உரிய முறையில் நிர்வகிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை அடையலாம் எனவும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுச் சட்டமூலத்தின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள விடயங்கள் காரணமாக அது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட வகையிலானதும், அரசியலமைப்புக்கு முரணானதுமான விடயங்களை கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் இது கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தனவினால் கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது சட்டமூலம் தொடர்பில் ஆழமான விவாதம் நடத்தப்பட வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றில் முதலாம் வாசிப்புக்காக விடப்பட்டதுடன், வெள்ளிக்கிழமை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மூலம் உருவாக்கப்படும் ஆணைக்குழுவானது, சர்வதேச பிணக்குத் தீர்வு நிலையமொன்றை தாபிப்பதற்கும், விசேட பொருளாதார வலயமொன்றை தாபிப்பதற்கும், பதிவுசெய்தல், உரிமங்கள், அதிகாரவளிப்புக்கள், நகர வசதி தொழிற்பாடுகள் மற்றும் பொருளாதார வலயத்தினுல் வதிவிட சமூகமொன்றின் குடியேற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஏனைய கருமங்களை ஏற்பாடு செய்வதனை பணியாக கொண்டிருக்கும்.

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் காலி முகத்திடல் பகுதியின் 446.6 ஹெக்டயரிலுள்ள கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இது 269 ஹெக்டயர், கடல் நிரப்பப்பட்டு உருவாக்கப்பட்ட நிலப்பகுதியாகும்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய, இந்த வலயத்தின் நிருவாகப் பொறுப்பு, கொழும்பு துறைமுக நகரின் பொருளாதார ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.

ஐவருக்கு மேற்பட்ட, ஏழு பேருக்குக் குறைந்த ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று வருடங்களாகும்.

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்திற்குள் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் இந்த ஆணைக்குழுவின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிதியத்திற்குச் செல்லும்.

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஏழு சட்டங்களான,

தேசிய துறைமுக சபையின் 1978, 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம், மாநகர சபைக் கட்டளைச் சட்டம், இலங்கை வணிக மத்தியஸ்த சட்டம், நகர மற்றும் கிராமிய கட்டளைச் சட்டம், மூலோபாய அபிவிருத்தித் திட்டச் சட்டம், பொது ஒப்பந்த உடன்படிக்கைச் சட்டம் மற்றும் இலங்கை முதலீட்டு சபைச் சட்டம் ஆகியன, இவ்விசேட பொருளாதார வலயத்திற்குள் பொருந்தாது எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உள்நாட்டு இறைவரிச் சட்டம், பெறுமதி சேர் வரிச் சட்டம், 2002 மற்றும் 2005இல் நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டம், கலால் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், சுங்க கட்டளைச் சட்டம், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரிச் சட்டம் ஆகியன மூலம், கொழும்பு துறைமுக நகரை விடுவிப்பதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி வரிச் சட்டம், பந்தயம் மற்றும் கலால் சட்டம், தொழிலாளர்களின் வேலையை நிறுத்துவது தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம், களியாட்ட வரிச் சட்டம், அந்நியச் செலாவணி மற்றும் கெசினோ வர்த்தக ஒழுங்குபடுத்தல் சட்டம் ஆகியவற்றிலிருந்தும் இந்த வலயத்தை விடுவிப்பதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்திற்குள் மூலோபாய முக்கியத்துமுள்ள வர்த்தக நடவடிக்கைளுக்கு, நாற்பது வருடங்களுக்கு வரியிலிருந்து விடுவித்தல், ஊக்குவித்தலுக்கும் பிரேரணையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 04/15/2021 - 16:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை