உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எளிதாக நினைக்க வேண்டாம்

- நாட்டை பாதுகாக்க  அரசிடம் கோரிக்கை

நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற  தீவிரவாதிகளும் தற்கொலைதாரிகளும் சமூகத்தில் உலாவுகின்றனர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எளிதாக நினைக்காது நாடு எதிர் கொள்ளப்போகும் பேரழிவிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு பொறுப்புள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

சர்வதேச பின்னணியுடன் அடிப்படைவாத தீவிரவாதிகள் மேற்கொள்ளும் இத்தகைய தாக்குதல்கள் கத்தோலிக்கர்களை மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்வதல்ல.  அனைத்து இன, மத மக்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படலாம். அரசாங்கம் இது விடயத்தில் மிக எச்சரிக்கையுடன் செயல்படுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

நூற்றுக்கு மேற்பட்ட பயிற்சி பெற்ற தீவிரவாதிகளும் தற்கொலைதாரிகளும் சமூகத்தில் உலாவுகின்றனர். அது தொடர்பில் அரசாங்கம் மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் இரண்டு வருட நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஆயர் பேரவை முக்கியஸ்தர்களான சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேருட்திரு வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் பேருட்திரு ரேமண்ட் விக்ரமசிங்க ஆண்டகை,அருட்பணி சிறில் காமினி அடிகளார் ஆகியோரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

முஸ்லிம் அடிப்படைவாதிகள், முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகளை வைத்து நாம் அந்த குற்றச்சாட்டை சாதாரண முஸ்லிம் மக்கள் மீது சுமத்தப் போவதில்லை. சிறு தரப்பினரே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த நாட்டில் முஸ்லிம்கள் பலநூறு வருடங்களாக சிங்கள, தமிழ் மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை நாம் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டோம்.

சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அவர்களில் சிறு தரப்பினர் இத்தகைய தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையான முஸ்லிம் மத அடிப்படையை தவிர்த்து அடிப்படைவாதிகளாக செயற்படுபவர்கள்.

அவ்வாறானவர்களுக்கு இடமளிக்க வேண்டாமென நாம் உண்மையான முஸ்லிம்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாதாரணமாகப் பார்த்து அதனை மறந்துவிட்டு செயல்படக்கூடாது. இத்தகைய தாக்குதல்கள் கத்தோலிக்க மக்களை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. நாட்டில் அனைத்து மக்களையும் இலக்காகக் கொண்ட ஒரு பேரழிவுக்கான திட்டம் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. எதிர்காலத்தில் ஏனைய மதங்களுக்கு எதிராக தாக்குதல் நடைபெறலாம். மிகவும் எச்சரிக்கையாக நாம் செயல்படுவது முக்கியம். அடிப்படைவாத அரசியல்வாதிகள் உள்ளிட்ட தரப்பினரிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பது முக்கியம்.

அது தொடர்பில் காத்திரமான வியூகம் தயாரிக்கப்பட்டு முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தவறினால் எதிர்காலத்தில் நாடு பெரும் அழிவை சந்திக்க நேரும்

இது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் முக்கியமான விடயம் அது தொடர்பில் நிரந்தரமான தீர்வு மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதனை விடுத்து ஓரிருவரை பெயருக்காக சிறையில் அடைத்து வைப்பதும் பின்னர் அவர்களை விடுவிப்பதும் சிறுபிள்ளைத்தனமான செயல்.

உண்மையான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். ஒரு கட்சியின் தலைவர் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கும் போது அதே கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அது ஏன்? அதில் காணப்படும் இரகசியம் என்ன. எமக்கு நியாயமான சந்தேகம் ஏற்படுகின்றது.முஸ்லிம் உறுப்பினர்களின் வாக்குகள் அவசியமற்றது என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கே அவ்வாறு ஆதரவளிக்கப்படுகின்றது அப்படியானால் என்ன நடக்கின்றது?அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு வரப்பட்டதா?அதில் உள்ள இரகசியம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கிணங்க ஒரு சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் தொடர்பில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அதற்கான காரணத்தை சட்டமா அதிபர் மீது மட்டும் சுமத்திவிட்டு பொறுப்புள்ள அரசாங்கம் வெறுமனே இருந்துவிட முடியாது.

தற்போது கத்தோலிக்க ஆலயங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள தகவல்களை வைத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படலாம். அந்த தகவல்கள் என்ன? அதனை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிதைவடைந்துள்ள நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். நாட்டின் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து, நாடு எதிர்கொள்ள நேரும் அழிவுகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பேராயர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 04/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை