வடக்கின் ஐந்து மாவட்டங்களிலுள்ள குளங்கள் புனரமைக்க ரூ.300 மில்.நிதி

- சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வில் வடக்கு ஆளுநர்

வடமாகாணத்தின் 05மாவட்டங்களிலுள்ள குளங்களை புனரமைப்பு செய்வதற்காக 300மில்லியன் நிதியை தனிப்பட்ட ஒதுக்கீடாக திறைசேரி மூலம்பெற்றுள்ளதாகவும் இந்த திட்டங்களின் ஊடாக விவசாய நிலத்தை மேலும் விஸ்தரிப்பதற்கும் விவசாயிகள் பயன் பெறுவதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கும் முயற்சிப்பதாக  வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கான கட்டட திறப்பு விழா மற்றும் வடமாகாணத்துக்குட்பட்ட சிறந்த விவசாயிகளுக்கான விருதுடன் சான்றிதழ் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்வும் புதிய விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் கடந்த 19ஆம் திகதி காலை   யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் மாகாணப் பணிப்பாளர், விவசாய அமைச்சின் செயலாளர், விவசாய துறைசார் அதிகாரிகள் என பலரும்  கலந்து கொண்ட  இந்நிகழ்வில் ,

 புதிய கட்டட தொகுதியை திறந்துவைத்து கருத்து தெரிவித்த வடக்கு  ஆளுநர், ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் அடிப்படையிலே உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கான முக்கியத்துவம் வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு பல விதமான சலுகைகள் வழங்கப்பட்டுவருகின்றது. அத்துடன் அந்த அடிப்படையில் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு, உள்நாட்டு பொருட்களுக்கான சரியான விலை நிர்ணயம் வழங்கப்படுதல் போன்றவற்றை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளாரென தெரிவித்தார். விவசாயிகளுக்காக குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்குதல், விதைகள் மற்றும் உரம் வழங்குதல், நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றை ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

விவசாயத் துறையை சார்ந்தவர்கள் இந் நிறுவனம் மூலம் பெற்றுக் கொள்ளும் தொழிநுட்ப அறிவை சிறந்த முறையில் பயன்படுத்துமாறும் நியாயமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.   வடமாகாணத்திலே விவசாயத்துறையில் காணப்படுகின்ற வசதிகளை பயன்படுத்தி வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துமாறும் அரச நியமனங்களை பெற்றுக்கொண்டவர்கள் சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றுமாறும் கேட்டுக்கொண்டார். அத்துடன் மத்திய அரசிலிருந்து வருகைதரவிருக்கும் விவசாய அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி பல்வேறு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.   வடமாகாணத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான விருது,சான்றிதழ், மற்றும் காசோலையையும் புதிதாக நியமனம் பெற்ற விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களையும் வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆளுநர்.

Wed, 04/21/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை