செப். 11 இல் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றாக வாபஸ்

அமெரிக்காவின் நீண்ட போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆப்கானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஆப்கானில் இருக்கும் ஏனைய நேட்டோ துருப்புகளும் அந்நாட்டில் இருந்து வெளியேறவுள்ளன. இவ்வாறு வெளிநாட்டு படைகள் வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதிக்கு முழுமையாக வாபஸ் பெறப்படவுள்ளன.

ஆப்கானுக்கு படையெடுக்கக் காரணமான செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று சரியாக 20 ஆண்டுகளில் அமெரிக்கா, ஆப்கானில் இருந்து வெளியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தத் தாக்குதலை நடத்தியோரை அழித்துவிட்டதால், ஆப்கானிஸ்தான் சென்ற இலக்கு நிறைவு பெற்றுவிட்டதாக பைடன் தெரிவித்தார். எனினும் தலிபான்கள் மற்றும் ஏனைய கடுப்போக்காளர்களுக்கு எதிரான போரில் தெளிவான வெற்றி பெறாத நிலையில் படைகள் வாபஸ் பெறப்படுவது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.

ஆப்கானில் இருக்கும் 2,500 அமெரிக்க துருப்புகளுடன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜோர்ஜியா உட்பட பிரதானமாக நோட்டோ நாடுகளின் சுமார் 7000 படையினர் உள்ளனர். ஆப்கான் போரினால் 2,448 அமெரிக்க படைகள் கொல்லப்பட்டிருப்பதோடு 2 ட்ரில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளது. ஆப்கானில் அமெரிக்க துருப்புகள் உச்சத்தில் இருந்த 2011 ஆம் ஆண்டில் அங்கு 100,000 படையினர் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.

அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளும் நிலைமைக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் விதமாக அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த புதன்கிழமை தான் பைடனுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அமெரிக்காவின் முடிவை மதிப்பதாகவும், சுமுகமான முறையில் இந்த மாற்றம் நிகழ்வது தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து வேலை செய்வதாகவும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Fri, 04/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை