பசறை விபத்து: பாரிய கல்லை உடன் அகற்ற உத்தரவு; அபாயகரமான இடங்கள் பற்றி ஆராய்வு

- பசறை கோர விபத்து; தப்பியோடிய சாரதி கைது
- விபத்தை ஆய்வு செய்ய மூவர் குழு

பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் தலைமையில் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. 

இதன்போது, குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் சரிந்து வீழ்ந்துள்ள கல்லை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறும், மாகாணத்தினுள்ளே மேலும் இதுபோன்ற அபாயகரமான இடங்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். 

அத்துடன் இந்த கோரச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் உத்தரவிட்டார். 

அதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாகாண போக்குவரத்து ஆணையகம், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் ஆளுநரின் நிதியத்திலிருந்து இழப்பீடுகளை வழங்கவும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மேஜர் சுதர்ஷன டெனிபிடிய, சாமர சம்பத் தசநாயக, பசறை மற்றும் லுணுகலை பிரதேச சபைகளின் தலைவர்கள், ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. பி.பீ.விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் திரு. நிஹால் குணரத்ன, உள்ளூராட்சி ஆணையர் மங்கல விஜயநாயக, பதுளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிடல் ஆலோசகர், மாகாண போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பசறை கோர விபத்து; தப்பியோடிய சாரதி கைது

லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில்  இடம்பெற்ற பஸ் விபத்தில் 9ஆண்களும், 5பெண்களும் உட்பட 14பேர் உயிரிழந்தனர். 

அத்துடன், 5சிறுவர்கள் உட்பட 33பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்களுள் 20ஆண்களும் 13பெண்களும் அடங்குவர். 

குறித்த விபத்து இடம்பெற்றதை அடுத்து, விபத்துக்குள்ளான பஸ்ஸின்  எதிர்த்திசையில் பயணித்த  கென்டய்னர்  சாரதி தப்பிச் சென்றிருந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்   தெரிவித்தனர். 

விபத்து தொடர்பில் ஆய்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர்  பிரேமசிறி தெரிவித்தார்.  இந்த குழு தற்சமயம் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இந்நிலையில், பெருந்தெருக்கள் அபிவிருத்தியில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது தொடர்பில் ஆராய்வதுடன்,விபத்தின் போது உடைந்து விழுந்த கற்பாறை இவ்வளவு காலமாக ஏன் அகற்றப்படவில்லை என்பது தொடர்பிலும் ஆராய்வதாக பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.  

 

Mon, 03/22/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை