சுகாதார வழிகாட்டுதல்களுடன் பண்டிகை கொண்டாட்டங்கள்

- விழிப்புடன் செயற்பட DIG அஜித் ரோஹண வலியுறுத்து

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.  

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு பொதுமக்களால் தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாட முடியவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு தொற்றுநோயின் பரவல் தொடர்ந்தாலும் பொதுமக்களுக்கு பண்டிகையைக் கொண்டாட வாய்ப்பு வழங்கப்படுமென்றும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கே இலங்கையில் வைரஸ் பரவல் காணப்படுவதால் இது சாத்தியமானதென்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாட்டில் இன்னமும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

பண்டிகைக் காலங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடும்போதும் வெளியில் செல்லும்போது தனிமைப்படுத்தல் சட்டத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் புத்தாண்டு பண்டிகை காலங்களில் இயங்கும் கடை உரிமையாளர்கள் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென்றும் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.  

கடைகளுக்குள் நுழைவதற்கு முன்பு கைகளை கழுவுமாறும் அதேநேரம், வெப்பநிலையை கண்காணிப்பதுடன், சமூக இடைவெளியை பராமரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாட விரும்பினால் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.   மக்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படலாமென்றும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார். 

சுப்பிரமணியம் நிசாந்தன்  

Fri, 03/19/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை