மலேசியாவுடன் உறவை துண்டிப்பது தொடர்பில் வட கொரியா எச்சரிக்கை

பண மோசடிக் குற்றச்சாட்டில் வட கொரிய நாட்டவர் ஒருவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த மலேசிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்ட நிலையில் அந்நாட்டுடனான இராஜதந்திர உறவை துண்டிப்பது தொடர்பில் வட கொரியா எச்சரித்துள்ளது.

அமெரிக்கா இதற்கான விளைவை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் வட கொரிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் மலேசியா தரப்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இவ்வாறு நாடு கடத்தலுக்கு முகம்கொடுக்கும் தனது நாட்டு பிரஜையின் பெயரை வட கொரியா வெளியிடாதபோதும், வட கொரிய நாட்டவராக மூன் சோல் மியோங் என்பரை நாடுகடத்துவது பற்றி மலேசிய நீதி மன்றம் இம்மாத ஆரம்பத்தில் தீர்ப்பு அளித்திருந்தது.

கடந்த ஒரு தசாப்தகாலமாக மலேசியாவில் வாழ்ந்து வரும் மூன், கடந்த 2019 மே மாதம் கைது செய்யப்பட்டார். அவரை நாடுகடத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையை அடுத்தே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோரக்கைக்கு மலேசிய அரசு ஒப்புதல் அளித்தபோதும் அதற்கு எதிராக மூன் வழக்குத் தொடுத்தார்.

2008ஆம் ஆண்டு மூன் மலேசியாவுக்கு வரும் முன் வட கொரியா மீதான ஐ.நா தடையை மீறி அந்நாட்டு ஆடம்பர பொருட்களை சிங்கப்பூருக்கு விநியோகித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். இந்நிலையில் மலேசியாவின் செயற்பாடு இரு தரப்பு உறவின் அடித்தளத்தை சிதைப்பதாக உள்ளது என்று வட கொரிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜொங் நாம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து மலேசிய மற்றும் வட கொரிய உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த படுகொலையின் பின்னணியில் வட கொரியா இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அது மருத்து வருகிறது.

Sat, 03/20/2021 - 17:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை