அன்று கூட்டு ஒப்பந்தத்தை தூற்றியோர் இன்று போற்றுகின்றனர்

பெருந்தோட்ட கம்பனிகள் என்ன திட்டம் தீட்டினாலும் ஆயிரம் ரூபாவினையும் பெற்றுக்கொடுத்து தொழிலாளர்களையும் பாதுகாப்போம் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்திட்டத்திற்கு 15 வருட பூர்த்தியினை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை (18) டிக்கோயா வனராஜா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் , உங்களுக்கு தெரியும் எதனை எடுத்தாலும் ஆயிரம் ரூபாவை பற்றி மாத்திரம் தான் பேசப்படுகின்றன ஆனால் அதனை தாண்டி பெற்றுக்கொடுக்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன. அதில் முதலாவதாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அதற்கு தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் கொவிட் 19 வைரஸ் காரணமாக அதை எம்மால் செய்ய முடியாமல் போய் விட்டது.இந்த திட்டத்தினை பிரஜாசக்தியின் மூலம் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதே நேரம் இன்று எதிர்கட்சி உள்ளவர்கள் பல்வேறு கையாலாகாத குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறனர். கம்பனிகள் என்றால் சட்டநடவடிக்கை எடுப்பார்கள். ஆகவே அதற்கு நாங்களும் சட்டநடவடிக்கை எடுப்போம்.நாங்கள் தொழிலாளர்களிடம் வாங்கும் சந்தாவுக்காக அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவோம். இதற்கு முன்னர் தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் கம்பனிகள் சரியாக பெற்றுக்கொடுத்தது போல் பலர் பேசுகின்றனர்.முன்னர் கூட்டு ஒப்பந்தம் வேண்டாம் என்றவர்கள் இன்று அதை இல்லாமல் செய்தால் தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோய்விடும் என்று தெரிவிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹற்றன் விசேட நிருபர், ஹற்றன் சுழற்சி நிருபர்

Sat, 03/20/2021 - 17:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை