பிரதமர் மஹிந்த இன்று பங்களாதேஷ் பயணம்

சுதந்திர பொன்விழாவில் பங்குபற்றுவார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷ் செல்லவுள்ளார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பி பேரில் அங்கு விஜயம் செய்யும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 19 மற்றும் நாளை 20ஆம் திகதிகளில் பங்களாதேஷில் தங்கியிருப்பதுடன் அந்நாட்டின் தேச பிதாவான ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழாவிலும் பங்களாதேஷ் சுதந்திர பொன்விழா நிகழ்வுகளிலும் விசேட அதிதியாக கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் விவசாயம், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் சம்பந்தமாக அந்நாட்டின் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விஷேட பேச்சுவார்த்தைகளிலும் பிரதமர் ஈடுபடவுள்ளார்.

அதற்கிணங்க இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம்,தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டவுள்ளன.

அந்நாட்டின் தேசிய தியாகிகள் நினைவுச் சின்னத்தை பார்வையிடவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுமுள்ளார். அத்துடன் பங்கபந்து நினைவு அருங்காட்சியகத்தையும் பிரதமர் பார்வையிடவுள்ளார். 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் ஒரு தனி குடியரசு நாடாக உருவாக்கப்பட்டதுடன் அதனையடுத்து அதன் மறு ஆண்டே இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. இரு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு அடுத்த வருடம் நினைவு கூறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பிரதமரின் பங்களாதேஷ் விஜயம் அமையவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Fri, 03/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை